ஒரே ஓவரில் 6 சிக்ஸர்: உள்ளூர் கிரிக்கெட்டில் வம்சி கிருஷ்ணா சாதனை

கடப்பா: ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் விளாசிய நான்காவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் வம்சி கிருஷ்ணா. உள்ளூர் அளவில் நடைபெறும் நடப்பு சிகே நாயுடு கோப்பை (23 வயதுக்குட்பட்டோர்) தொடரில் ரயில்வே அணிக்கு எதிராக ஆந்திராவுக்காக விளையாடிய அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, இந்திய வீரர்கள் ரவி சாஸ்திரி (1985), யுவராஜ் சிங் (2007) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (2022) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். அந்த வரிசையில் ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த வம்சி இணைந்துள்ளார். ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் 64 பந்துகளில் 110 ரன்களை அவர் எடுத்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர் அடங்கும். லெக் ஸ்பின்னரான தமன்தீப் சிங் வீசிய ஓவரில் ஆறு சிக்ஸர்களை வம்சி விளாசி இருந்தார்.

கடப்பாவில் உள்ள ஒய்.எஸ். ராஜ ரெட்டி ஏசிஏ கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ரயில்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 865 ரன்களை அந்த அணி எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆந்திரா அணி முதல் இன்னிங்ஸில் 378 ரன்கள் எடுத்தது. இந்த ஆட்டம் டிரா ஆனது.