‘கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு’ – குறிப்பால் உணர்த்திய சர்பராஸ் கானின் தந்தை

ராஜ்கோட்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் போட்டியில் சர்பராஸ் கான் களம் கண்டுள்ளார். முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் பதிவு செய்து அசத்தியிருந்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் 311-வது வீரராக சர்பராஸ் கான் அறிமுகம் ஆகியுள்ளார். டெஸ்ட் அணிக்கான ‘கேப்’-பை பெற்றதும் அதை தனது தந்தையின் கைகளில் கொடுத்து நெகிழ செய்தார். தொடர்ந்து மகனை ஆரத் தழுவிக் கொண்டார் சர்பராஸ் கானின் தந்தை நவுஷத் கான். ‘இந்திய அணிக்காக நான் விளையாடுவதை அப்பா பார்க்க வேண்டுமென விரும்பினேன். அந்த வகையில் எனது கனவு பலித்தது’ என அரை சதம் விளாசிய பிறகு சர்பராஸ் தெரிவித்திருந்தார்.

“Cricket is Gentleman’s Everyone’s Game” என்ற வாசகம் அடங்கிய மேல் சட்டையை அணிந்திருந்த நவுஷத் கான், ஆனந்தக் கண்ணீர் ததும்ப தனது மகனை வாழ்த்தி இருந்தார். மும்பையில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் சர்பராஸ் கானுக்கும் பயிற்சியாளர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் போகுமாறு சொன்ன காரணத்தால் மகனின் அறிமுக டெஸ்ட் போட்டியை பார்க்க மும்பையில் இருந்து ராஜ்கோட் பயணித்துள்ளார் நவுஷத்.

“இந்த நாளை பார்க்க வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றி. இது ஆனந்தக் கண்ணீர். இந்த தருணத்துக்காக நான் நீண்ட நாள் காத்திருந்தேன். அதன் வெளிப்பாடு தான் நான் கண் கலங்க காரணம். தந்தை, பயிற்சியாளர் என எனது ரோல் இதில் உள்ளது. இது அவருக்கான தொடக்கம்தான். பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்.

கிரிக்கெட் ஆர்வம் கொண்ட பிள்ளையின் எந்தவொரு தந்தையும், பயிற்சியாளரும் ‘ஒரு நாள் நாட்டுக்காக நமது பிள்ளை விளையாடுவான்’ என்று தான் நம்புவார்கள். அதனை உலகம் உணர வேண்டுமென்றால் அணியில் ஆடும் லெவனில் அந்த வீரனுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது மட்டுமே நடக்கும். ஆனால், அது கனவாக மட்டும் இருக்கும் என நான் நினைத்தது இல்லை. நிறைய பேரை இந்த விளையாட்டில் நான் பார்த்து உள்ளேன். சிலருக்கு வாய்ப்பு விரைந்து, சிலருக்கு தாமதமாகவும் கிடைக்கும். கடின உழைப்பின் மீது நம்பிக்கை இருந்தால் நிச்சயம் அதை எட்டலாம்” என மகன் அறிமுக வீரராக களம் கண்டது தெரிவித்தார். இவரது மற்றொரு மகனான முஷீர் கான், அண்மையில் நடைபெற்ற யு19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.