ராஜ்கோட்: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசியுள்ளார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில், ரஜத் படிதார் ஆகியோர் விரைவாக விக்கெட்களை இழந்தனர். இதனால் 33 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது இந்திய அணி. இதன்பின் ரோகித் சர்மாவும், ரவீந்திர ஜடேஜாவும் கூட்டணி அமைத்தனர்.
இங்கிலாந்து பந்துவீச்சை சுலபமாக சமாளித்த இந்த இருவரும், ரன்கள் குவிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய ரோகித் சர்மா 71 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுபக்கம் ஜடேஜா 90 பந்துகளை சந்தித்து அரைசதம் கடந்தார். தொடர்ந்து இருவரும் பார்ட்னர்ஷிப் மூலம் 150+ ரன்கள் சேர்த்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் 53-வது ஓவரின்போது ரோகித் சர்மா சதத்தை பதிவு செய்தார். 157 பந்துகளில் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 101 ரன்கள் எடுத்து தொடர்ந்து ஆடி வருகிறார் ரோகித். கடந்த எட்டு இன்னிங்சில் 40 ரன்களை கூட தொடவில்லை. கடந்த எட்டு இன்னிங்சில் ரோகித்தின் அதிகப்பட்ச ஸ்கோர் 39. இதனால், ரோகித் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்தநிலையில்தான் இன்றைய ஆட்டத்தில் 33/3 என்று அணி சரிவை சந்தித்த நிலையில், அதிலிருந்து அணியை மீட்டு ரன்களை குவித்ததுடன் சதம் அடித்தும் அசத்தியுள்ளார் ரோகித். 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித்தின் 12-வது டெஸ்ட் சதம் இதுவாகும்.
