ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் நாகதேவதை கோயில் ஜீரணத்தார பிரதிஷ்டை விழாவில் பக்தர்கள் தலைமீது தேங்காய் உடைத்து நூதன வழிபாடு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஓசபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீ அஸ்வத்த நாராயண கட்டை நாகதேவதை கோயிலின் ஜீர்னோத்தார பிராண பிரதிஷ்டை விழாவையொட்டி இன்று ஸ்ரீ மகாகணபதி பூஜை ருத்வி கிரகணம், கலச ஸ்தாபன பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து நாக தேவதைக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின், ஸ்ரீ குரு ரேவண்ணா சித்தேஸ்வர சுவாமி, ஸ்ரீ கரியால லிங்கேஸ்வர சுவாமி, ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி, செலவீரலிங்கேஸ்வர சுவாமி, ஸ்ரீ உஜ்ஜினி லிங்கேஸ்வர சுவாமி, ஸ்ரீ சித்தேஸ்வர சுவாமி, ஸ்ரீ கூலி சந்திரா சுவாமி, ஸ்ரீ பசவேஸ்வர சுவாமி ஆகிய கிராம தெய்வங்களை பக்தர்கள் தலை மேல் சுமந்தபடி பாரம்பரிய முறையில் இசைகள் வாசித்து ஆடி ஊர்வலமாக சென்றனர்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர், தலை மீது தேங்காய் உடைத்து நூதன முறையில் நேர்த்தி கடன் செலுத்தினர். இந்த விழாவில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஏராளமான கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
