விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் ரோஹித் சர்மா 41 பந்துகளில், 14 ரன்கள், ஷுப்மன் கில் 46 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 34 ரன்கள், ஸ்ரேயஸ் ஐயர் 59 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 27 ரன்கள், ரஜத் பட்டிதார் 72 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 32 ரன்கள், அக்சர் படேல் 51 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களும், ஸ்ரீகர் பரத் 23 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுத்தனர். அதேநேரம், ஜெய்ஸ்வால் 257 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 179 ரன்களும் அஸ்வின் 5 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். கைவசம் 4 விக்கெட்கள் இருக்க இன்று 2-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது இந்திய அணி.
ஜெய்ஸ்வால் இரட்டை சதம்: ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ஜெய்ஸ்வால் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் தனது இரட்டை சதத்தை விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் இந்தியர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றார். 209 ரன்களில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, இதன்பின் வந்தவர்கள் விரைவாகவே விக்கெட்டை இழந்தனர். இதனால், 112 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், சோயிப் பஷீர், ரெஹான் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதனிடையே, முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி அதிரடி தொடக்கம் கொடுத்தார். அவருக்கு பென் டெக்கெட் உறுதுணையாக இருந்தார். இதனால் முதல் விக்கெட்டுக்கு இந்தக் கூட்டணி 59 ரன்கள் எடுத்தது. குல்தீப் யாதவ் 21 ரன்கள் எடுத்திருந்த பென் டெக்கெட்டை வீழ்த்த, அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து வலுவான ஓப்பனிங் தந்த ஜாக் கிராவ்லியை அக்சர் படேல் காலி செய்தார். ஜாக் கிராவ்லி 76 ரன்களில் வீழ்ந்த பின்னர், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் (47 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர்.
அவர்கள் தவறினார்கள் என்பதைவிட இந்திய பவுலர் பும்ரா தவற வைத்தார் எனலாம். அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா இங்கிலாந்தின் முன்னணி வீரர்களை வெளியேற்றினார். ரூட், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ் போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்த பும்ரா மொத்தமாக ஆறு விக்கெட்களை கைப்பற்றினார். இறுதியில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 143 ரன்கள் பின்தங்கியது.
அதிகவேக 150+ விக்கெட்: இன்றைய போட்டியில் 6 விக்கெட் வீழ்த்தியன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகவேக 150+ விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை பெற்றார் ஐஸ்ப்ரீத் பும்ரா. பும்ரா 6781 பந்துகளில் இந்த சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக உமேஷ் யாதவ் 7661 பந்துகள், ஷமி 7755 பந்துகளில் இந்த சாதனையை படைத்திருந்தனர்.
பும்ரா தவிர இன்றைய போட்டியில் குல்தீப் யாதவ் 3 விக்கெட், அக்சர் படேல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
