‘ஒன் மேன் ஷோ’ – ஜெய்ஸ்வால் இல்லையெனில் இந்திய பேட்டிங் காலி!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் இந்திய இடது கை தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசியதுடன் 209 ரன்களை 290 பந்துகளில் எடுத்து இந்திய அணி 396 ரன்களை முதல் இன்னிங்சில் எட்ட பெரும் பங்களிப்புச் செய்தார். ஜெய்ஸ்வால் இன்னிங்ஸ் இல்லையெனில் இந்திய அணி 220 ரன்களை எடுக்கத் திணறியிருக்கும்.

பேட்டிங்குக்குச் சாதகமான பிட்சில் ஜெய்ஸ்வால் மட்டும்தான் அடித்துக் கொண்டே இருந்தார், மற்ற வீரர்கள் நன்றாகத் தொடங்கி பெரிய இன்னிங்ஸுக்குச் செல்லாமல் பொறுமை இல்லாமல் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 34 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 27 ரன்களிலும், ரஜத் படிதார் 27 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 17 ரன்களிலும் வெளியேறினர். தொடக்கத்தில் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் ஆடினார். அவர் 19 பவுண்டரிகளையும் 7 சிக்சர்களையும் விளாசியதிலிருந்தே அவர் எந்த மூடில் ஆடினார் என்பது புரியவரும்.

22 வயதாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இளம் வயதில் டெஸ்ட் இரட்டைச் சதம் கண்ட 3வது இந்திய வீரர். இவருக்கு முன்னதாக கிரிக்கெட் கரியர் பாதியிலேயே முடிந்த வினோத் காம்ப்ளி, அதற்கும் முன்னர் இளம் வயதில் தன் அறிமுகத் தொடரிலேயே அதிபயங்கர வேகப்பந்து வீச்சு அணியான மே.இ.தீவுகளுக்கு எதிராக மே.இ.தீவுகளில் 220 ரன்களை அடித்த சுனில் கவாஸ்கர் ஆகியோர் உள்ளனர். அதேபோல் காம்ப்ளி, கவுதம் கம்பீர், கங்குலிக்குப் பிறகு டெஸ்ட் இரட்டைச் சதம் கண்ட இடது கை இந்திய பேட்டர் என்ற பெருமையையும் சேர்த்துக் கொண்டார் ஜெய்ஸ்வால்.

ஆனால் நன்றாக ஆடி வந்தவர் கடைசி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்திருந்தால் சுனில் கவாஸ்கர், சேவாகிற்குப் பிறகு தொடக்கத்தில் இறங்கி கடைசி வரை ஆடிய சாதனையையும் நிகழ்த்தியிருப்பார். ஆனால் அங்குதான் இவருக்கு கொஞ்சம் கிரிக்கெட் சென்ஸ் இல்லை என்று தோன்றுகிறது. 7 பீல்டர்களைப் பவுண்டரியில் நிறுத்தி வைத்து ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசுகிறார், அவரை இறங்கி வந்து சிக்ஸர் விளாசினால் நம்மை ஊடகங்களும் ரசிகர்களும் பாராட்டுவார்கள் என்ற இளம் வீரருக்கேயுரிய ரத்த வேகத்தில் அடிக்கப் போய் கொடியேற்றி அவுட் ஆனார். அது ஓவரின் 5வது பந்து ஒரு சிங்கிள் எடுத்து அடுத்த ஓவருக்குச் சென்றிருந்தால், இப்படியே ஆடியிருந்தால் ஸ்கோர் 400-425 ரன்களையாவது எட்டியிருக்கும். அவசரப்பட்டு தவறான ஷாட்டைத் தேர்வு செய்தார்.

ஆனாலும் இவரது இன்னிங்ஸ் சேவாக், இலங்கைக்கு எதிராக அஜந்தா மெண்டிஸ் விக்கெட்டுகளைக் குவித்துக் கொண்டிருந்த போது இந்திய வீரர்கள் வரிசையாக ஆட்டமிழக்க சேவாக் 200 ரன்களை 221 பந்துகளில் அடித்தாரே அந்த இன்னிங்ஸிற்கு ஒப்பானதாகும். பிரமாதமான இன்னிங்ஸ், இன்னும் கொஞ்சம் சென்ஸுடன் ஆடியிருந்தால் கடைசி வீரர்களை வைத்துக் கொண்டு இன்னும் சுதந்திரமாக ஆடியிருக்கலாம். ஒருவேளை அவர் களைப்படைந்திருக்கலாம். இருப்பினும் 22 வயதில் ஒரு வீரர் இரட்டைச் சதம் அதுவும் இங்கிலாந்துடன் எடுக்கிறார் என்றால் அது சாதாரண காரியமல்ல. ஷிகர் தவானுக்குப்பிறகு நல்ல இடது கை தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் ரூபத்தில் கிடைத்திருக்கிறார்.

இந்நிலையில் எக்ஸ் பக்கத்தில் ஜெய்ஸ்வாலுக்கு ரசிகர்களின் பாராட்டுக் குவிந்து வருகிறது. ரசிகர் ஒருவர் ஜெய்ஸ்வாலின் இன்னிங்சை ‘ஒன் மேன் ஷோ’ என்று வர்ணித்து, ’ஒரே ஒருவர்தான் ரன் அடிக்கிறார்’ என்று பாராட்டையும் கோபத்தையும் கலந்து பதிவிட்டுள்ளார்.

ஷிகர் தவான் தன் பதிவில், “யஷஸ்வி ஜெய்ஸ்வால், யூ பியூட்டி… உன் மட்டை மந்திரக் கோலானது. அட்டகாசமான 200 ரன்களுக்கு வாழ்த்துக்கள். கிரிக்கெட் வரலாறு மீண்டும் எழுதப்பட்டுள்ளது” என்று பாராட்டியுள்ளார். கெவின் பீட்டர்சன்: ‘ஜெய்ஸ்வால் விளையாட்டில் ஒரு மகா கதை’ என்று பாராட்டியுள்ளார்.

ஹர்ஷா போக்ளே தன் பதிவில், ‘ஜேம்ஸ் ஆண்டர்சனை பார்த்து அந்த ஓவரில் ஆடிவிட்டு ஸ்பின்னர்களை தாக்கியிருக்கலாம், எது எப்படியிருந்தாலும் கனவு பேட்டிங் பிட்சில் என்ன ஒரு இன்னிங்ஸ்! இவருக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோர் 34. ஜெய்ஸ்வால் இல்லையெனில் பிரச்சனைதான்” என்று பதிவிட்டுள்ளார்.