மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 216 ரன்கள் இலக்கு

பிரிஸ்பன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியஅணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் நடைபெற்று வரும் இந்தடெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 311 ரன்களும், ஆஸ்திரேலியா 289 ரன்களும் எடுத்தன. 22 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 7.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் எடுத்தது.

நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 72.3 ஓவர்களில் 193 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கிரெய்க் பிராத்வெயிட் 16, கிர்க் மெக்கென்சி 41, அலிக் அத்தானஸ் 35, கவேம் ஹாட்ஜ் 29, ஜஸ்டின் கிரீவ்ஸ் 33, ஜோஷுவா டி சில்வா 7 ஆட்டமிழந்தனர். ஷாமர் ஜோசப் 3 ரன்களில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

இதையடுத்து 216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 19 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 60 ரன்கள்எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் 33, கேமரூன்கிரீன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்கவெற்றிக்கு மேற்கொண்டு 156 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது ஆஸ்திரேலிய அணி.