கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு: ஒரே நாளில் 2 தங்கம் வென்றது தமிழ்நாடு

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற ஆடவருக்கான ரிதமிக் ஜோடி யோகாவில் தமிழக வீரர்களான சர்வேஷ், தேவேஷ் ஆகியோர் 127.89 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரர்கள் ஆவர். மேற்கு வங்கத்தின் அவராஜித் சஹா, நில் சார்கர் ஜோடி(127.57) வெள்ளிப் பதக்கமும், மகாராஷ்டிராவின் சரன், யாத்தினேஸ் ரவீந்திரா (127.20) வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.

மகளிருக்கான ரிதமிக் ஜோடி பிரிவில் தமிழகத்தின் ஓவியா, ஷிவானி வெண்கலப் பதக்கம் வென்றது. மேற்கு வங்கத்தின் மேஹா மைதி, உர்மீ சமந்தா ஜோடிதங்கப் பதக்கமும், மகாராஷ்டிராவின் ஸ்வரா சந்தீப், யுகாங்கா கிஷோர் ஜோடி வெள்ளிப் பதக்கமும் வென்றது.

மேலக்கோட்டையூரில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டியில் ஆடவருக்கான எப்பி பிரிவு இறுதிப்போட்டியில் தமிழகத்தின் அன்பிலஸ் கோவின் 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் மணிப்பூர் வீரர் ஜெனித்தை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான சேபர் தனிநபர் பிரிவில் தமிழகத்தின் ஜெபர்லின் அரை இறுதி சுற்றில்12-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியானாவின் ஹிமான்ஷுநெகியிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

மகளிருக்கான கபடியில் தமிழக அணி 41-32 என்ற புள்ளிகள் கணக்கில் மகாராஷ்டிராவை வீழ்த்தியது. இதன் மூலம் லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் தமிழக அணி 4 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது. ஆடவருக்கான கபடியில் ‘பி’ பிரிவில் உள்ள தமிழ்நாடு, டெல்லி அணியுடன் மோதியது. இதில் தமிழ்நாடு 39-36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதியில் நுழைந்தது.