கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு – முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு களமிறங்கும் தமிழ்நாடு

சென்னை: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில் சொந்த மண்ணில் முதல் 3 இடங்களுக்குள் வருவதை இலக்காக கொண்டு தமிழ்நாடு களமிறங்குகிறது.

6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் ஜனவரி 19ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பில் 522 பேர் கொண்ட வலுவான அணி களமிறங்குகிறது. தமிழக வீரர், வீராங்கனைகள் 26 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு, புனேவில் நடந்த இரண்டாவது பதிப்பில் 88 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருந்தனர்.

100 பதக்கங்கள்: இம்முறை கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023-ல் தமிழக அணியின் செஃப்-டி-மிஷனாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளார் ஜே.மெர்சி ரெஜினா உள்ளார். அவர் கூறும்போது, “ இம்முறை 100 பதக்கங்கள் வரை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தேசிய தரவரிசையின் அடிப்படையில் நாங்கள் களமிறக்கக்கூடிய வீரர்களின் எண்ணிக்கையில் எங்களுக்கு கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இந்த முறை போட்டியை நடத்துபவர்களாக நாங்கள் இருப்பதால் பெரிய குழுவை களமிறக்கி உள்ளோம். பதக்கப் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் நாங்கள் வரமுடியும் என்று நம்புகிறேன்” என்றார்.

தங்கப் பதக்கம்: தடகளம், நீச்சல், பளுதூக்குதல், வாள்வீச்சு மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவற்றில் பெரும்பாலான பதக்கங்களை வெல்ல வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு கருதுகிறது. அதேவேளையில் கைப்பந்து, கூடைப்பந்து, கால்பந்து போன்ற குழுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வெல்லும் போட்டியாளர்களாக தமிழ்நாடு இருக்கக்கூடும். கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் ஸ்குவாஷ் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டின் பதக்க வாய்ப்புகளை அதிகரித்துள்ளது.