ஒலிம்பிக் போட்டிக்கு விஜய்வீர் சித்து தகுதி

ஜகார்த்தா: பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதி சுற்று இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 25 மீட்டர் ரேப்பிடு ஃபையர் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து 28 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றதுடன் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

கஜகஸ்தானின் நிகிதா சிர்யுகின் 32 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், கொரியாவின் ஜோங் ஹோ 23 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 17 பேர் தகுதி பெற்றுள்ளனர்.