லண்டன்: இந்திய அணியின் சீனியர் வீரர் அஸ்வினை புகழ்ந்து பேசியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மான்டி பனேசர். இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வர உள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் அஸ்வின் இந்திய அணியின் துருப்பு சீட்டாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது சென்னை – சேப்பாக்கத்தில் சதம் விளாசி அசத்தி இருந்தார் அஸ்வின். அதோடு அந்த தொடரில் 32 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். தொடரின் ஆட்ட நாயகன் விருதையும் அவர்தான் வென்றிருந்தார்.
“சுழலுக்கு ஏற்ப செயல்பட்டு வித்தியாசமான டெலிவரி வீச வேண்டுமென்ற மைண்ட்செட்டை அஸ்வின் கொண்டிருக்கிறார். தன்னை சிறந்த வீரராக தகவமைத்துக் கொள்கிறார். பந்து சுழலும் தன்மை கொண்ட ஆடுகளங்களில் எல்லா நேரமும் அதிக விக்கெட்களை வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. இருந்தும் அதற்கு அவர் தன்னை அடாப்ட் செய்து கொள்கிறார். அவர் ஒரு மொபைல் செயலி போல ஆறு மாதத்துக்கு ஒரு முறை தன்னை அப்டேட் செய்து கொள்கிறார். அதை அவர் தனது விளையாட்டு கேரியர் முழுவதும் செய்து வருகிறார்.
அவரது பந்து வீச்சு என்றால் எப்போதும் நான் அங்கு மாணவனாகவே இருப்பேன். புதிய விஷயங்களை அதில் இருந்து கற்றுக் கொள்கிறேன். அவர் சிறந்த பந்து வீச்சாளர்” என பனேசர் தெரிவித்துள்ளார்.
500 விக்கெட் சாதனையை நோக்கி அஸ்வின்: 37 வயதான அஸ்வின், கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 490 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அதோடு 3,193 ரன்களை பதிவு செய்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பவுலராகவும், ஆல்ரவுண்டர்களில் 2-வது இடத்திலும் அஸ்வின் உள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 970 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதம் மற்றும் 1 சதமும் அடங்கும். 88 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.