சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசன் ஓய்வு

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ஹென்ரிச் கிளாசன், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். என்றாலும், 2019 – 2023-க்கு இடையில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து பேசியுள்ள கிளாசன், “நான் சரியான முடிவைத்தான் எடுக்கிறேனா என்று பல இரவுகள் தூங்காமல் யோசித்தேன். ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் டெஸ்ட் கிரிக்கெட். ஆடுகளத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நான் சந்தித்த இன்னல்கள் இன்று என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்கியுள்ளது. இது ஒரு சிறந்த பயணம். இதில் எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

டெஸ்ட் தொப்பியே இதுவரை எனக்கு வழங்கப்பட்டதில் மிகவும் விலையுயர்ந்த தொப்பி. டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் என்னை வடிவமைத்த அனைவருக்கும் நன்றி. ஆனால் இப்போதைக்கு ஒரு புதிய சவால் காத்திருக்கிறது. நான் அதனை எதிர்நோக்கியுள்ளேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் 172.71 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 140.66 என ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருக்கும் கிளாசனுக்கு 2023 சிறந்த ஆண்டாக அமைந்தது. இந்த இரண்டு வடிவங்களிலும் கவனம் செலுத்தும்பொருட்டு தற்போது டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவித்துள்ளார் 32 வயதான ஹென்ரிச் கிளாசன்.