மீனம் கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த நீங்கள், அதிகம் தெரிந்திருந்தும் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். மறப்போம் மன்னிப்போம் என்றிருக்கும் நீங்கள், சண்டைக்காரர்களைக் கூட சந்தோஷப்படுத்துவதில் வல்லவர்கள்.
உங்கள் 6-வது ராசியில் ஆடம்பரமாக இந்தாண்டு பிறப்பதால் தயக்கம், தடுமாற்றம், பயம் எல்லாம் நீங்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். குருபகவான் 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை உணர்வார்கள். மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் பணம் புரட்டி புது வீடு கட்டி குடி புகுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மகனுக்கு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். வெளிமாநில புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மூத்த சகோதரிக்கு இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் ஆதாயம் உண்டு. மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். நிலுவையில் இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
குருபகவான் 1.5.2024 முதல் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். தைரியம் கூடும். எதிர்ப்புகள் அடங்கும். என்றாலும் ஓய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாத அளவுக்கு வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வசதி, செல்வாக்கைக் கண்டு தவறானவர்களுடன் நட்புறவாட வேண்டாம்.
நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாகச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்ப்பதால் அவர்களின் தன்னம்பிக்கை வளரும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொள்வீர்கள். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து முடிவெடுக்கவும்.
ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் வருடம் முடியும் வரை அமர்கிறார்கள். எனவே மனக்குழப்பம், பேச்சில் தடுமாற்றம், எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், பதட்டம், தலைச்சுற்றல், பல் வலி வந்து நீங்கும். மனைவிக்கு கர்ப்பப்பை கோளாறு, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. மகன் அல்லது மகளுடன் வெளிநாடு சென்று வருவீர்கள். வேற்று இனத்தவர்கள் உதவுவார்கள். குலதெய்வம் கோயிலை புதுப்பிப்பீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளை குறிப்பிட்ட நேரத்தில் செலுத்த முடியாத அளவுக்கு தர்ம சங்கடத்தில் மூழ்கக் கூடும்.
இந்த ஆண்டு முழுக்க விரயச் சனி தொடர்வதால் வருங்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். முக்கிய பிரமுகர்கள், ஆன்மிகவாதிகள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். எல்லோருக்கும் நல்லது செய்தும் கெட்டப் பெயர்தான் மிஞ்சும். சிலர் உங்களைப் பற்றிய வதந்திகளை பரப்பிவிடுவார்கள். இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகளே! ஜனவரி மாதத்தில் திடீர் லாபம் உண்டு. வியாபாரத்தை பெருக்க விளம்பரமும் செய்வீர்கள். மே, ஜூன் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வங்கிக்கு கட்ட வேண்டிய கடனை முறையாக செலுத்துவீர்கள். வேலையாட்கள் பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். புரோக்கரேஜ், எண்டர்பிரைசஸ், செங்கல், பேக்கரி, வாகன உதிரிபாகங்களால் ஆதாயம் அடைவீர்கள். டிசம்பர் மாதம் முதல் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே! வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவான பேச்சால் நிம்மதி அடைவீர்கள். இடமாற்றம் இருந்தாலும் மீண்டும் அதே இடத்தில் வந்தமர்வீர்கள். ஜனவரி மாதத்தில் தகுதி உயரும். ஜூன் மாதத்தில் புது வாய்ப்புகளும், பதவிகளும் அமையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். இருந்தாலும் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள்.
இந்த வருடம் பணபலத்தை உயர்த்துவதாகவும், பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் அமையும்.
பரிகாரம்: அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை சென்று வணங்குங்கள். தந்தையில்லா பிள்ளைக்கு உதவுங்கள். மன நிம்மதி உண்டாகும்.
– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல. |
