ஆண்டாள் திருப்பாவை 15 | மாயக் கண்ணனை வணங்கி மகிழ்வோம்..!

எல்லே, இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

சில்லென்று அழையேன்மின் நங்கையீர்! போதருகின்றேன்;

வல்லை, உன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக,

ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?

எல்லாரும் போந்தாரோ? ‘போந்தார், போந்து எண்ணிக் கொள்’

வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை, மாயானைப் பாடேலோ ரெம்பாவாய்!

அதிகாலை நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் தோழிக்கும், அவளை எழுப்ப வந்த தோழியருக்கும் நடக்கும் உரையாடலை இப்பாசுரம் விவரிக்கிறது. கோதை நாச்சியாரும், அவளது தோழியரும் சேர்ந்து ஒவ்வொருவர் வீடாகச் சென்று அனைவரையும் பாவை நோன்புக்கு அழைக்கின்றனர். இதில் தோழியர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியோ எழுந்து வரவில்லை. அந்தக் கோபத்தில் இருந்த ஆண்டாளின் தோழி ஒருத்தி, “இளமையாக இருக்கும் கிளிப் பெண்ணே! நாங்கள் அனைவரும் வந்து உன்னை எழுப்பும் அளவுக்கு உன்னிடம் என்ன சிறப்பு இருக்கிறது என்றே புரியவில்லை. இவ்வளவு நேரம் கூவிக் கூவி அழைத்த பின்பும் உறக்கத்தில் இருந்து எழுந்து வர மறுப்பதற்கு காரணம் என்னவோ?” என்று வினவுகின்றனர்.

அதற்கு அவளும், “இதோ வந்துவிடுகிறேன். விரைவில் எழுந்து வருவதற்கு எனக்கும் விருப்பம்தான். ஆனால் மார்கழி குளிர் என்னை எழவிடாமல் தடுக்கிறது. மற்ற தோழியர் அனைவரும் வந்துவிட்டனரா?” என்று கேட்கிறாள். உடனே தோழியரும், “உனக்கு சந்தேகம் இருந்தால் விரைந்து எழுந்து வந்து இங்கு உள்ளவர்களை எண்ணிப் பார்த்துக் கொள். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்ற யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறமை கொண்டவனுமான மாயக் கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய்” என்று கூறி உறங்குவது போல் நடிக்கும் தோழியை மார்கழி நீராட அழைக்கின்றனர்.