காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.20) நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் அமைந்துள்ள பிரணாம்பிகை உடனுறை தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பான வகையில் நடைபெற்றது. இக்கோயிலில் அனுக்கிரகமூர்த்தியாக சனிபகவான் அருள் பாலிக்கிறார். சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்த கடந்த சனிப்பெயர்ச்சி விழா 2020-ம் ஆண்டு டிச.27-ம் தேதி நடைபெற்றது. அப்போது கரோனா பரவல் சூழல் காரணமாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. இம்முறை சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.
இவ்விழாவையொட்டி வெள்ளி கவசத்தில் காட்சியளித்த சனீஸ்வரபகவானுக்கு இன்று மதியம் நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு திரையிடப்பட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டு, சனிப்பெயர்ச்சி நிகழ்வை குறிக்கும் வகையில், சரியாக மாலை 5.20 மணிக்கு திரை விலக்கப்பட்டு, சனீஸ்வரபகவானுக்கு மகா தீபாராதனைக் காட்டப்பட்டது.
சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் நளன் குளத்தில் மூழ்கி நீராடி குளக்கரையில் உள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்துவிட்டு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்து சனிபகவானை வழிபட்டு செல்வது ஐதீகம். அதன்படி தோஷ நிவர்த்திக்காக பக்தர்கள் காலை முதலே நளன் குளத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடினர். தொடர்ந்து கலி தீர்த்த விநாயகர் கோயிலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்து விட்டு தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சென்றனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தர்ம தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1000 கட்டண தரிசன வரிசைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. கோயிலினுள் வடக்குப் பிரகார மண்டபத்தில் உற்சவரான சனீஸ்வர பகவான் இன்று இரவு முதல் தங்க காக வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் இங்கும் தரிசித்துச் சென்றனர்.
போலீஸாரின் சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுப்பப்பட்டனர். காரைக்கால் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களிலிருந்து திருநள்ளாறுக்கு இலவச பேருந்து போக்குவரத்து ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை விரிவான வகையில் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் சுமார் 1,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நளன் குளத்தில் அவ்வப்போது நீர் புதுப்பிக்கப்பட்டது. பக்தர்கள் குளத்தில் விட்டுச் செல்லும் ஆடைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன.
பக்தர்கள் கூட்டம் குறைவு: லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட குறைகாவாகவே காணப்பட்டது. காலை முதல் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில், பிற்பகல் 3 மணியளவில் லேசான மழை தூறல் தொடங்கியது. தொடர்ந்து சனிப்பெயர்ச்சியின் போது மிதமான மழை பெய்தது. இதனால் பக்தர்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டது.
