AUS vs PAK | 300 ரன்கள் முன்னிலை பெற்றது ஆஸி.

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 53 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 101.5 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

குர்ரம் ஷாசாத் 7, பாபர் அஸம் 30, இமாம் உல் ஹக் 62, சர்ப்ராஸ் அகமது 3, சவுத் ஷகீல் 28, ஃபஹீம் அஸ்ரப் 9, அமீர் ஜமால் 10, ஷாகீன் ஷா அப்ரிடி 4 ரன்களில் நடையை கட்டினர். ஆகா சல்மான் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நேதன் லயன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.

216 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 33 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் 0, மார்னஷ் லபுஷேன் 2 ரன்களில் குர்ரம் ஷாசாத் பந்தில் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 34, ஸ்டீவ் ஸ்மித் 43 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்கள் இருக்க 300 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை சந்திக்கிறது.