2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு!

ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது. கார் விபத்தில் ஆபத்தான காயங்களுடன் உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் ஆடவில்லை. அவருக்கு காயத்தினால் ஏகப்பட்ட இழப்புகள். இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் ரிஷப் பண்ட் முழு உடல்தகுதி பெற்று ஐபிஎல் கிரிக்கெட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட்டுக்கும் தயாராகிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்/கேப்டனாக இறங்குகிறாரா அல்லது விக்கெட் கீப்பர்/பேட்டராக இறங்குகிறாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்குவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதோடு உறுதியும் செய்கிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முகாமில் ரிஷப் பண்ட் பங்கேற்றபோதே அவர் நிச்சயம் 2024 ஐபிஎல் தொடரில் ஆடுவார் என்று அரசல்புரசலாகப் பேச்சு எழுந்தது.

அப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி இயக்குநர் சவுரவ் கங்குலியும் இருந்தார். தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் உடனிருந்தார். பண்ட் இதில் கலந்து கொண்டு வீரர்கள் தக்கவைப்பு மற்றும் ரிலீஸ் குறித்து விவாதக்களத்தில் இருந்தார். ஐபிஎல் ஏலம் வரும் 19-ம் தேதி நடக்கவிருப்பதால் அதற்கான ஆலோசனைக் கூட்டத்திலும் பண்ட் பங்கேற்றதால் அவர் 2024 சீசனில் விளையாடப் போகிறார் என்பது சூசகமாக வெளிப்பட்டது.

கார் விபத்தில் அவரது வலது முழங்காலில் 3 முக்கிய லிகமண்ட்கள் காயத்தினால் சேதமடைந்தது. இதனால் எந்த கிரிக்கெட்டிலும் ஆட முடியாமல் போனது. பிறகு அவருக்கு முழங்கால் லிகமண்ட் அறுவைசிகிச்சை நடைபெற்று அவர் புனருத்தாரண சிகிச்சையில் இருந்தார். சமீப காலமாக ரிஷப் பண்ட் தன் காயம் குணமடைந்து கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவது பற்றி பாசிட்டிவ் ஆக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

ரிஷப் பண்ட் பேட்டிங்கை தொடங்கி விட்டார் என்று தெரிந்தாலும் விக்கெட் கீப்பர் பணிக்கு இன்னும் அவர் உடல் தகுதி பெற்ரு விட்டதா என்பது புரியாத புதிராகவே உள்ளது. கடந்த ஜூலை முதல் பிசிசிஐ-யிடமிருந்து ரிஷப் பண்ட் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. ஆனால் அவர் காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் வலையில் பேட்டிங், கீப்பிங்கைத் தொடங்கி விட்டார் என்றும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்று விட்டார் என்று சான்றிதழ் கொடுத்து விட்டால் ரிஷப் பண்ட் ஆடும் முதல் தொடர் ஐபிஎல் தொடராகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்ட் இல்லாததால் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனால் 14 ஆட்டங்களில் டெல்லி கேப்பிடல்ஸ் 5 வெற்றிகள், 9 தோல்விகளுடன் அட்டவணையில் கடைசி இடத்துக்கு முதலிடத்தில் முடிந்தது.