மதுரை: திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நிசும்பசூதனி சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே பழைய நெடுங்குளம் கிராமத்தில் பழமையான சிலை இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் தர்மராஜா, கருப்பசாமி தகவல் அளித்தனர். அதன்படி அக்கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் தாமரைக்கண்ணன், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் களஆய்வு செய்ததில் நிசும்பசூதனி சிற்பம் எனத் தெரிந்தது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ”பழைய நெடுங்குளத்தில் விளைநிலங்களுக்கு செல்லும் வழியில் நிசும்பசூதனி சிற்பம் காணப்படுகிறது. இது மூன்றடி உயரம், அகலமுடைய பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது. தலைப்பகுதியில் அக்னிமகுடத்துடன் விரிந்த ஜடா பாரம், காதுகளில் பத்திர குண்டலங்கள், கழுத்தில் ஆபரணம், 8 கரங்களுடன் உள்ளது. கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, கேடயம், மணி, கபாலம் போன்ற ஆயுதங்கள் உள்ளது. இடைப்பகுதியில் இடைக்கச்சை, கால்களில் அணிகலன்கள், வலது காலை குத்த வைத்தும், இடது காலில் நிசும்பன் என்ற அரக்கனை மிதித்தபடியும் சிற்பம் உள்ளது. இதில் நிசும்பன் சிற்பம் புதைந்துள்ளது. இதனை அக்கிராமத்தினர் வழிபடுகின்றனர்.
பொதுவாக சோழநாட்டு பகுதிகளில் நிசும்பசூதனி சிற்பத்தின் காலடியில் சும்பன், நிசும்பன் என 2 அசுரர்களின் உருவம் காணப்படும். ஆனால் பாண்டிய நாட்டு பகுதியில் நிசும்பசூதனி சிற்பத்தின் காலடியில் நிசும்பனின் உருவம் மட்டுமே உள்ளது. இது சிற்பம் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம். இச்சிற்பத்திற்கு முன்பு ஒரு நாயக்கர் கால தூண் சிற்பமும் காணப்படுகிது. இதன் மூலம் நிசும்பசூதனிக்கு மண்டபம் அமைத்து நாயக்க மன்னர்கள் வழிபாடு செய்ததும் தெரிகிறது” என்று அவர்கள் கூறினர்.
