திருவண்ணாமலை உச்சியில் நாளை அதிகாலையுடன் மகா தீப தரிசனம் நிறைவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டுள்ள மகா தீப தரிசனம் நாளை(டிச. 7) அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த நவ. 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் நடைபெற்றது. மூலவர் சந்நிதி முன்புள்ள தங்கக்கொடி மரத்தில் நவ. 17-ம் தேதிகொடியேற்றப்பட்டதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 26-ம் தேதிநடைபெற்றது. மூலவர் சந்நிதி முன்பு அதிகாலை 4 மணிக்கு பரணிதீபம் மற்றும் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, ஐயங்குளத்தில் 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

உண்ணாமுலை அம்மன் சமேதஅண்ணாமலையார், துர்கை அம்மன் ஆகியோர் கடந்த 28-ம்தேதி கிரிவலம் சென்றனர். கார்த்திகை தீபத்திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கடந்த 30-ம் தேதி நிறைவு பெற்றது.

‘மலையே மகேசன்’ என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் கடந்த நவ. 26-ம் தேதி ஏற்றப்பட்ட மகா தீப தரிசனத்தை 10-வது நாளாக நேற்றும் பக்தர்கள் தரிசித்தனர். 11 நாட்களுக்கு மகா தீபம் ஏற்றப்படும். இதையொட்டி 11-வது நாளான இன்று (6-ம் தேதி) மாலை ஏற்றப்படும் மகா தீப தரிசனம் நாளை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது.

பின்னர், மலை உச்சியில் இருந்து மகா தீபக் கொப்பரை, அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

தொடர்ந்து, மகா தீப கொப்பரையில் சேகரிக்கப்படும் ‘மை’, மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்குசாற்றப்படும். பின்னர், தீப மை பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். மலை உச்சியில் வைக்கப்பட்ட 5 அடி உயர கொப்பரையில், 11 நாட்களுக்கு மகா தீபம் ஏற்றுவதற்காக சுமார் 3,500 கிலோ நெய் மற்றும் 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.