ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பால் தேனியில் சைவத்துக்கு மாறிய அசைவ ஹோட்டல்கள்!

தேனி: தேனி மாவட்டத்தைக் கடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் அதிகரித்தள்ளது. ஆகவே இந்த வழித்தடத்தில் உள்ள பல அசைவ ஹோட்டல்கள் சைவத்துக்கு மாறி உள்ளன.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம் தேதி மாலை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து முன்பதிவு மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் சபரிமலையின் முக்கிய வழித்தடமாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் இவ்வழியே சென்று வருகின்றனர். தற்போது பாதயாத்திரை பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. விரதம் இருந்து இருமுடி கட்டி பக்தர்கள் வருவதால் சைவ உணவுகளின் தேவை இப்பகுதியில் அதிகரித்துள்ளது.

இதனால் பல ஹோட்டல்கள் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு மாறி உள்ளன. இதற்காக புதிய பேனர்களை வடிவமைத்து தங்கள் கடை முன்பு காட்சிப்படுத்தி உள்ளனர். மேலும் பக்தர்களுடைய இருமுடிகளை பாதுகாப்பாக வைக்கவும், வழிபாடுகளை மேற்கொள்ளவும் ஹோட்டல்களில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

இதுகுறித்து உணவு உரிமையாளர்கள் கூறுகையில், “சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால் அசைவ உணவுகள் அதிகம் தயாரித்து வந்தோம். தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிகம் இப்பகுதியை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஆகவே சைவ ஹோட்டலாக தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. மகர விளக்கு பூஜை வரை இந்த மாற்றம் நடைமுறையில் இருக்கும்” என்றனர்