“நலமுடன் இருக்கிறேன்” – சூர்யா @ ‘கங்குவா’ படப்பிடிப்பு விபத்து

சென்னை: ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பின்போது ரோப் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், “நலமுடன் இருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நண்பர்கள், நலம் விரும்பிகள், அன்பான ரசிகர்களே… விரைவில் குணமடைய வேண்டி நீங்கள் அனுப்பிய மெசேஜ்களுக்கு மனமார்ந்த நன்றி. நலமுடன் இருக்கிறேன். உங்கள் அன்புக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

விபத்து: சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்குகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு (நவ 22) ‘கங்குவா’ படத்தின் சண்டைகாட்சி தொடர்பான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரோப் கேமரா ஒன்று அறுந்து விழுந்து சூர்யாவுக்கு விபத்து ஏற்பட்டது. உடனடியாக சூர்யா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இரண்டு வாரம் ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.