IPL | மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர்: இம்முறை புதிய ரோல்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கவுதம் கம்பீர் மீண்டும் இணைந்துள்ளார். இந்த முறை அணியின் ஆலோசகராக (Mentor) அவர் செயல்பட உள்ளார். இந்த அறிவிப்பை கொல்கத்தா அணியின் சிஇஓ வெங்கி மைசூர் அறிவித்துள்ளார்.

கடந்த 2011 முதல் 2017 வரையில் விளையாடி உள்ளார். அப்போது 2012 மற்றும் 2014 என இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது கொல்கத்தா. அந்த இரண்டு சீசனிலும் அணியை வழிநடத்தியது கம்பீர் தான். அதன் பிறகு கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக கம்பீர் இயங்கி வந்தார். கடந்த சீசனில் கோலியுடன் கம்பீர் வார்த்தைப் போரில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

“நான் உணர்ச்சிவசப்படும் நபர் அல்ல. ஆனால்,இந்த உணர்வு வேறு விதமாக உள்ளது. மீண்டும் தொடங்கிய இடத்துக்கு திரும்பியுள்ளேன். அந்த ஊதா மற்றும் தங்க நிற ஜெர்சியை அணிவது குறித்து எண்ணும் போது என்னுள்ளத்தில் அனல் பரவுகிறது. நான் கொல்கத்தா அணிக்கு மட்டும் திரும்பவில்லை மகிழ்ச்சி நிறைந்த நகரத்துக்கு திரும்பி வருகிறேன்” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

வரும் ஐபிஎல் சீசனில் அவர் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் உடன் இணைந்து பயணிக்க உள்ளார். அவரை நடிகர் ஷாருக்கானும் அன்போடு வரவேற்றுள்ளார்.

மேலும், லக்னோ அணியுடனான இந்த பயணம் மறக்க முடியாத வகையில் அமைந்ததாகவும். அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் அன்பும் நன்றியும் என கம்பீர் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை தனக்கு வழங்கிய சஞ்சீவ் கோயங்காவுக்கு நன்றி சொல்லியுள்ளார். வரும் நாட்களில் பல அற்புதங்களை லக்னோ அணி நிகழ்த்தும் என அவர் தெரிவித்துள்ளார்.