திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.18) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இங்கு கடந்த 13-ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்கியது. தினமும்யாகசாலை பூஜை, ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தங்க ரதத்தில் வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலை 1மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகின்றன. காலை 6 மணிக்குயாகசாலை பூஜைகள் தொடங்குகின்றன. பகல் 12.45 மணிக்கு தங்க சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்புபாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேருகிறார். பிற்பகல் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.

திருக்கல்யாணம்: மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுகிறார். அங்குகஜமுகம், சிங்கமுகம் மற்றும்சுயரூபத்துடன் வரும் சூரபத்மனை,லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வதம் செய்கிறார். பின்னர் சூரபத்மனை சேவலாகவும்,மயிலாகவும் மாற்றி ஆட்கொள்வார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகுசந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து கிரிபிரகாரம் உலா வந்து, திருக்கோயிலை அடைகிறார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று, பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படும். தொடர்ந்து, 7-ம் நாளான நாளை (நவ. 19) திருக்கல்யாணம் நடைபெறும்.

விழாவை முன்னிட்டு கடந்த 6 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரிலேயே தங்கி, விரதம் இருந்து வருகின்றனர். மேலும், இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.

சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணிகளில்ஈடுபட்டுள்ளனர்.

100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் 12 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடற்கரையில் தீயணைப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *