ODI WC 2023 | இலங்கையை 5 விக்கெட்டுகளில் எளிதில் வீழ்த்தியது நியூஸிலாந்து

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூருவில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது நியூஸிலாந்து. அதன்படி, களமிறங்கிய இலங்கை 46.4 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணியின் குஷல் பெரேரா மட்டும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 51 ரன்கள் எடுத்த அவர் ஐந்தாவது விக்கெட்டாக வீழ்ந்தார். அதற்கு முன்பாகவே 8.2 ஓவர்களுக்கு எல்லாம் நான்கு விக்கெட்களை இழந்தது அந்த அணி. இலங்கையின் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, தீக்சனா மட்டும் இறுதிக்கட்டத்தில் 38 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து தரப்பில் ட்ரெண்ட் பவுல்ட் 3 விக்கெட்டும், பெர்குசன், சான்ட்னர் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

172 ரன்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய நியூஸிலாந்துக்கு சிறப்பான துவக்கம் கொடுத்தனர் ரச்சின் ரவீந்திராவும், டெவான் கான்வேவும். அணியின் ஸ்கோர் 86 ரன்களை எட்டியபோது இந்தக் கூட்டணி பிரிந்தது. 45 ரன்கள் எடுத்திருந்த கான்வே முதல் விக்கெட்டாக வெளியேறினார். இதன்பின் 42 ரன்கள் எடுத்த ரச்சின் ரவீந்திராவும் அவுட்டானார். டேரில் மிட்செல் 43 ரன்கள் எடுத்த உதவ, நியூஸிலாந்து அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இலங்கை தரப்பில் மேத்யூஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். நடப்பு தொடரில் நியூஸிலாந்து பெறும் ஐந்தாவது வெற்றி இதுவாகும். அதேநேரம், இலங்கை பெறும் 7-வது தோல்வி இதுவாகும்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *