மும்பை: வான்கடே ஸ்டேடியத்தில் ஆப்கானிஸ்தான் அணி விதித்த 292 ரன்கள் இலக்கை துரத்தி வரும் ஆஸ்திரேலியா அணி, ஆப்கன் பவுலர்களின் அட்டகாசமான பந்துவீச்சால் திணறிவருகிறது. 89 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்தது.
2வது ஓவரின் 2வது பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட். அவரை நவீன் உல் ஹக் வீழ்த்தினார். இதே நவீன் உல் ஹக் அடுத்து வந்த மிட்செல் மார்ஸையும் விக்கெட்டாக்கினார். 11 பந்துகளில் தலா இரண்டு பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசிய 24 ரன்கள் மிட்செல் மார்ஷ் எல்பிடபிள்யு மூலம் அவுட் ஆனார். இதனால் 6வது ஓவரிலேயே 2வது விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா.
இதன்பின் ஒன்பதாவது ஓவரை வீசவந்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டுசென்றார். முதல் பந்திலேயே 18 ரன்கள் எடுத்திருந்த டேவிட் வார்னரை க்ளீன் போல்டாக்கிய அவர், அடுத்த பந்தில் ஜோஷ் இங்லிஷை டக் அவுட் செய்தார். தொடர்ந்து இரண்டு பந்துகளில் ஆஸ்திரேலியாவின் இரண்டு விக்கெட்களை அவர் வீழ்த்த, தடுமாற்றத்தை சந்தித்து. 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்களை இழந்தது ஆஸ்திரேலியா.
இதே அஸ்மத்துல்லாவின் 11வது ஓவரில் லபுஷேன் விக்கெட்டாக வேண்டியது. அவர் அடித்த எட்ஜ் ஆகியது. எனினும், நல்லவேளையாக கேட்ச் பிடிக்கப்படவில்லை என்பதால் அவர் தப்பிபிழைத்தார். எனினும் லபுஷேன் 15வது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டார். ரஷீத் கான் தனது பங்குக்கு ஸ்டோய்னிஸை 6 ரன்களில் எல்பிடபிள்யு மூலம் வெளியேற்றினார். தற்போதைய நிலையில் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் களத்தில் விளையாடி வருகின்றனர். 89 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்துள்ளது ஆஸ்திரேலியா.
ஆப்கானிஸ்தான் பவுலர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். விக்கெட் சரிவு ஒருபுறம் இருக்க, மெய்டன் ஓவர்களும் வீசப்பட்டன. முஜீபுர் ரஹ்மான் மற்றும் அஸ்மத்துல்லா ஆகியோர் தலா ஒரு ஓவர் மெய்டனாக வீசி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இதனால், ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா திணறிவருகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in