‘‘எனக்கு இழைக்கப்பட்டது அநீதி… பதில் மரியாதை எதிர்பார்க்காதீர்” – ‘டைம்டு அவுட்’ ஆன மேத்யூஸ் ஆதங்கம்

டெல்லி: “நம்மை மதிப்பவர்களுக்குத்தான் பதில் மரியாதை கொடுக்க முடியும். அதை விடுத்து அடிப்படை அறிவு இல்லாமல் செயல்படுபவர்கள் எங்களிடம் பதில் மரியாதையை எதிர்ப்பார்க்கக் கூடாது” என இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த விதம். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இது நடந்தது. இந்தச் சம்பவத்தால் போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்குவதை தவிர்த்தனர்.

போட்டிக்கு பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில், மேத்யூஸ் இந்த சம்பவம் தொடர்பாக தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். செய்தியாளர் சந்திப்பில், “நான் எந்த தவறும் செய்யவில்லை. விதிகளின்படி, இரண்டு நிமிடங்களில் நான் தயாராகி கிரீஸுக்குள் வந்துவிட்டேன். ஆனால், ஹெல்மெட்டில் திடீரென பிரச்சினை வந்துவிட்டது. ஹெல்மெட்டின் பட்டை கிழிந்துவிடும் என்பது எனக்கு எப்படி முன்கூட்டியே தெரியும். வீரர்களின் பாதுகாப்பை பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். அப்படி இருக்கையில், நான் ஹெல்மெட் இல்லாமல் அல்லது பிரச்சினையான ஹெல்மெட் உடன் ஆட வேண்டும் எனக் கூறுகிறீர்களா?. விக்கெட் கீப்பர் ஹெல்மெட் இல்லாமல் கீப்பிங் செய்ய முடியுமா. இது அடிப்படை. இது முற்றிலும் ஹெல்மெட் பிரச்சினை.

எனக்கு இழைக்கப்பட்டது அநீதி. அது விதிமுறைகளுக்கு இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், இரண்டு நிமிடங்களுக்குள் நான் கிரீஸுக்குள் இருந்தேன். சமரவிக்ரமா அவுட் ஆனதில் இருந்து நான் எப்போது கிரீஸுக்குள் வந்தேன் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. விதிமுறைப்படி இருந்தாலும், ஹெல்மெட் மாற்றுவதற்கு கேட்டு ஹெல்மெட் வந்தபின்னும் இரண்டு நிமிடங்களுக்கு மீதம் ஐந்து நொடிகள் இருந்தன. இதைக்கொண்டு மேல் நடவடிக்கைக்கு செல்வோம். நடுவர்கள் என்னுடைய பிரச்சினையை புரிந்துகொண்டாலும், அவர்கள் சோதனை செய்திருக்கலாம். வேண்டுமென்றால் டிவி அம்பயருடன் ஆலோசித்து முடிவெடுத்திருக்கலாம். நான் களத்தில் இருந்தால் நாங்கள் வெற்றிபெற்றிருப்போம் எனச் சொல்லவில்லை. இங்கு அனைவருமே வெற்றிபெறவே விளையாடுகிறோம்.

தெளிவாக தெரிகிறது அது ஹெல்மெட் பிரச்சினை. அடிப்படை அறிவு இருந்தால் அதை புரிந்துகொள்ள முடியும். என்னுடைய 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்காக இந்த அளவுக்கு ஒரு கீழே இறங்கியதை பார்க்கவில்லை. துரதிருஷ்டவசமாக, வங்கதேசத்துடன் இது நடந்துள்ளது. வேறு எந்த அணியும் இப்படி செய்யும் என நினைக்கவில்லை. ஷகிப் மற்றும் வங்கதேசத்திடம் இருந்து வெளிப்பட்ட அவமானகரமான செயல் இது. நான் வேண்டுமென்றே காலம் தாழ்த்தவில்லை என்பது ஷகிப்புக்கும் தெரியும். அவர் நினைத்தால் அப்பீலை வாபஸ் வாங்கியிருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை.

போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்கவில்லை என்பது இப்போது பிரச்சினையாகிறது. நம்மை மதிப்பவர்களுக்கு தான் பதில் மரியாதை கொடுக்க முடியும். அதை விடுத்து அடிப்படை அறிவு இல்லாமல் செயல்படுபவர்கள் எங்களிடம் பதில் மரியாதையை எதிர்ப்பார்க்கக் கூடாது” என்று மேத்யூஸ் கோபமாக பேசினார்.

முன்னதாக, இந்த சம்பவத்தில் விளக்கம் கொடுத்த வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், “இப்போது நடுவரிடம் முறையிட்டால் மேத்யூஸ் வெளியேற வேண்டும் என எங்கள் அணியின் ஃபீல்டர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து நான் நடுவரிடம் முறையிட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேனா அல்லது திரும்ப பெறுவேனா என என்னிடம் நடுவர்கள் கேட்டார்கள். இந்த வகை அவுட் கிரிக்கெட் விதிகளில் உள்ளது. அது சரியா, தவறா என்று எல்லாம் எனக்கு தெரியவில்லை. அணியின் வெற்றிக்காக நான் அந்த முடிவை எடுக்க வேண்டி இருந்தது. இது குறித்த விவாதங்கள் இருக்கும். ஆனால், அது விதிகளில் உள்ளது. அதனால் அந்த வாய்ப்பினை பயன்படுத்துவதில் எனக்கு கவலையில்லை” என போட்டி முடிந்ததும் தெரிவித்தார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *