நாமக்கல்: தமிழகத்தில் 1,131 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நரசிம்மர் சன்னதியில் தல விருட்ச மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று தல விருட்ச மரக்கன்றை நட்டு வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 12 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஆஞ்சநேயர் கோயில் திருப்பணி சட்டப்பேரவை அறிவிப்பின்படி திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 1,131 கோயில்களுக்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது.
கடந்த 28 மாதங்களில் 8,006 கோயில்களுக்கு திருப்பணிகள் நடத்த மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. திமுகவினர் கோயில் திருப்பணிக்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஈரோடு மண்டலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 345 பணிகள் 69.09 கோடி ரூபாய் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள கோயில்களில் 1 லட்சம் தல விருட்ச மரங்கள் நடப்பட்டுள்ளன. இப்படி எதுவொன்றாலும் இந்து சமய அறநிலையத் துறை சாதனை படைத்து வருகிறது. தமிழகத்தில் 2,000 கிராம கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்வதற்கு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022-2023-ம் ஆண்டில் 2,500 கோயில்கள், 2023-2024-ம் ஆண்டு 2,500 கோயில்கள் என 5,000 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா ரூ.2 லட்சம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 25 ஆயிரம் கோயில்களுக்கு திருப்பணிகள் முடிவுறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 5,436 கோடி ரூபாய் பெருமானம் உள்ள 5,480 ஏக்கர் இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மேலும் தொடரும். இத்திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் என 1 லட்சத்து 54 ஆயிரம் ஏக்கர் நிலம் அளவிடப்பட்டு அங்கு இந்த இடம் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான என பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் ரோப்கார் திட்டம் ஆய்வில் உள்ளது. மலைசார்ந்த கோயில்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 28 கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் ஆகலாம் என்ற அடிப்படையில் அர்ச்சகர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதுபோல் 8 பெண்கள் ஓதுவார்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பின் 36 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளன. 5 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்துள்ளனர். அவர்களுக்கும் நீதிமன்ற வழக்கு முடிந்தபின் அர்ச்சர்களாகும் சூழல் ஏற்படுத்தப்படும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியின்போது மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்எல்ஏ பெ.ராமலிங்கம், நகர் அமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
