ஆப்கன் வெற்றிகளும், அஜய் ஜடேஜா பங்கும்… – கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்வது ஏன்?

புனே: பொதுவாக உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் சில ஆச்சரிய சம்பவங்கள் நடக்கும். தற்போதைய நிலையில் நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணியின் ஆச்சரிய வெற்றிகள்தான் இந்த உலகக் கோப்பை தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யம் மிக்கதாக மாற்றியுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி, போட்டிகளை அவர்கள் அணுகும் விதம், களத்தில் வெளிப்படும் அவர்களின் செயல்பாடு ஆகியவை இது ‘ஆப்கானிஸ்தான் 2.0’ என சொல்லவைக்கும் அளவுக்கு புதியதாகவும், பார்பபதற்கும் ரசிக்கும் விதமாகவும் உள்ளது.

சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சிக்கு பயிற்சியாளர் ஜொனாதன் டிராட் பங்கு அளப்பரியது. எனினும், இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், அந்த அணியின் வெற்றிகளுக்கு முக்கியக் காரணகர்த்தவாக சொல்லப்படுவர் இந்தியாவின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா. பாகிஸ்தான் அணியை முதல்முறையாக வீழ்த்தி வரலாற்று வெற்றியை ஆப்கன் பெற்ற சமயத்தில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் எக்ஸ் தள பதிவு இப்படியாக இருந்தது. “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் ஆட்டம் சிறப்பானதாக உள்ளது. பேட்டிங்கில் அவர்களின் கட்டுக்கோப்பு, அவர்கள் வெளிப்படுத்திய நிதானம் மற்றும் விக்கெட்டுகளுக்கு இடையே ஆக்ரோஷமாக ஓடுவது அவர்களின் கடின உழைப்பை பிரதிபலிக்கிறது. இது அஜய் ஜடேஜாவின் தாக்கத்தின் காரணமாக இருக்கலாம்” என சச்சின் புகழ்ந்திருந்தார். சச்சின் மட்டுமல்ல, முன்னணி வீரர்கள் பலரும் அஜய் ஜடேஜாவை புகழ்ந்து வருகின்றனர்.

ஆப்கன் வெற்றியில் அஜய் ஜடேஜாவின் பங்கு… – முன்னாள் இந்திய அணி வீரர் அஜய் ஜடேஜா. நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக தான் ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பு ஆலோசகராக (mentor) நியமிக்கப்பட்டார். ஒரு பயிற்சியாளரின் பொறுப்பு வீரர்களுடன் இணைந்து அவர்களின் ஆட்டத்தை மேம்படுத்துவது. அதுவே ஓர் ஆலோசகரின் பொறுப்பு சற்று வித்தியாசமானது. வீரர்களுடன் தனிப்பட்ட முறையில் நேருக்கு நேர் அமர்ந்து ஆட்டத்தின் தன்மை, விளையாட்டின் உளவியல் அம்சங்கள் பற்றி பேச வேண்டும். பயிற்சியாளர் பொறுப்பை போலத்தான் இதுவும்.

உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால், இந்திய பிட்ச்களின் தன்மை, சூழலுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்பதற்காக ஆப்கன் கிரிக்கெட் நிர்வாகம் அஜய் ஜடேஜாவை பணியமர்த்தியது. ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான வீரர்கள் இந்தியாவில் முதன்முறையாக விளையாடுகிறார்கள் என்பதால், அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக அஜய் ஜடேஜா நியமிக்கப்பட்டார். அவரின் நியமனம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதுதான் ஆப்கனின் தொடர் வெற்றிகளில் நம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய பிட்சின் போக்கை சரியாக கணிக்கும் ஆப்கன், எதிரணியினரின் உத்தியையும் சரியாகக் கணிக்க தவறுவதில்லை. பெரிய அணிகள் இலக்கை விரட்டும்போது பதற்றத்துடன் செயல்படும்போது, சிறிய அணியான ஆப்கானிஸ்தான் பொறுமையாகவும் நிதானமாகவும் இலக்கை அணுகி வெற்றி பெறுகின்றனர்.

அஜய் ஜடேஜா என்றாலே 1996 உலகக் கோப்பையில் பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியில் இறங்கி அடித்த அடிதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். வக்கார் யூனிஸை ஒரு ஓவரில் புரட்டி எடுத்த அவர், அந்தப் போட்டியில் மட்டும் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 45 ரன்களை எடுத்திருப்பார். அன்று பவுலிங்கும் செய்து 5 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே கொடுத்திருப்பார். அவரின் இந்த அதிரடிப் பங்களிப்பு அன்று இந்திய வெற்றியைத் தீர்மானித்தது. ஜடேஜா தான் ஆடிய காலக்கட்டத்தில் ஒரு சிறந்த ஃபீல்டர், பயனுள்ள மிடில் ஓவர் பவுலர். நல்ல ஃபினிஷரும்கூட. அசாருதீன், சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் தடுமாறும்போதும் நடுவரிசையில் வந்து அலட்டிக் கொள்ளாமல் ரன்களை குவித்து அணியை மீட்டெடுப்பார். கேப்டன்சி திறமைகளும் உண்டு.

இந்திய அணியின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவராக சொல்லப்பட்ட அஜய் ஜடேஜா, மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு அதன்பின், 2003-ல் ஓய்வை அறிவித்தது தனிக்கதை. என்றாலும் விளையாடிய காலங்களில் பேட்டிங்கில் ஆக்ரோஷம் காண்பிக்கும் அஜய் ஜடேஜா, கூல் மேன் என அழைக்கப்பட காரணம், சதம் அடித்தாலும் சரி, டக் அவுட் ஆகி வெளியேறினாலும் சரி முகத்தில் எப்போதும் சிரிப்பை மட்டுமே வெளிப்படுத்துவார். தற்போது ஆப்கானிஸ்தான் அணி களத்தில் காட்டும் உற்சாகம், ஆக்ரோஷம், விவேகமான நடத்தை, அவர்கள் முகத்தின் புன்சிரிப்பு ஆகியவை அன்று அஜய் ஜடேஜா களத்தில் காட்டிய அதே பாணிதான். விக்கெட் சரிவுகளுக்கு மத்தியில் பார்ட்னர்ஷிப் கட்டமைப்பது, மிடில் ஓவர்களில் சிங்கிள்ஸ் எடுத்து பிரஷரைக் குறைத்துக் கொள்வது என உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் பேட்டர்களின் அணுகுமுறையில் அஜய் ஜடேஜாவின் தாக்கமே அதிகம்.

இதனைத்தான் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் குறிப்பிட்டு அஜய் ஜடேஜாவை புகழ்ந்து வருகின்றனர். உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை கணித்த அஜய் ஜடேஜா, “உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள பெரும்பாலான அணிகள் 100 முதல் 150 ஆண்டுகள் கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தான் வெறும் 20 ஆண்டுகளாக மட்டுமே கிரிக்கெட் அரங்கில் உள்ளது. என்றாலும் கடந்த காலங்களில் அவர்கள் சில போட்டிகளில் பெரிய அணிகளுக்கே அதிர்ச்சி கொடுத்து வெற்றி பெறும் நிலைக்கு வந்துள்ளனர். ஏன், இந்தியாவுக்கு எதிராக கூட சிறப்பாக செயல்பட்டுள்ளனர். பெரும்பாலும் எல்லோரும் ஆப்கானிஸ்தானை கத்துக்குட்டி என்றே குறிப்பிடுகிறார்கள். இவை பெரிய அணிகளை வீழ்த்தாததால் சொல்லப்படுபவை. பெரிய அணிகளை தோற்கடிக்கும் நாளில், ஆப்கானிஸ்தானும் முக்கிய கிரிக்கெட் நாடுகளில் ஒன்றாக இடம்பெறும்” எனப் பேசினார்.

அவர் அன்று பேசியதுதான் தற்போது நடந்து வருகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை என முன்னாள் உலக சாம்பியன்களை அசால்ட்டாக வீழ்த்திவிட்டு அஜய் ஜடேஜாவின் அதே புன்முறுவலுடன் எந்தவித சலனமும் இல்லாமல் தங்களின் அரையிறுதி கனவுக்கான அடிகளை மெதுவாக எடுத்துவைக்கிறது ஆப்கானிஸ்தான்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *