லக்னோ: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்தது.
“சொந்த ஊரில் விளையாடுவது சிறந்த அனுபவம். ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்தது. அதே நேரத்தில் பனிப்பொழிவும் இருந்தது. பந்தை சரியான லெந்தில் வீச முயற்சித்தோம். நான் சிறப்பாகவே செயல்பட்டேன். அதைவிட அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. இந்த ஆடுகளத்தில் 230 ரன்கள் என்ற இலக்கை டிஃபென்ட் செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும். கேப்டன் ரோகித் அபாரமாக பேட் செய்திருந்தார்.
பவர்பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த விரும்பினோம். அதை பும்ரா மற்றும் ஷமி செய்தனர். விரைந்து 4 விக்கெட்களை இங்கிலாந்து இழந்தது. அந்த அழுத்தத்தை அவர்கள் உணரும் விதமாக சுழற்பந்து வீச்சாளர்கள் செயல்படுவது அவசியமானது. நாங்கள் பேட்டிங் பயிற்சியும் மேற்கொள்கிறோம். நாங்கள் ரெகுலர் பேட்ஸ்மேன்கள் கிடையாது. ஆனாலும் இறுதி கட்டத்தில் 15-20 ரன்கள் எடுக்கலாம் என்பதற்காக இந்தப் பயிற்சி. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓரளவுக்கு எங்களால் பங்களிப்பு தர முடிந்தது. முதல் சுற்றில் மேலும் 3 போட்டிகள் உள்ளன. அதன்பிறகே அரையிறுதியில் நாங்கள் யாரை எதிர்கொள்கிறோம் என்பது தெரியும்” என அவர் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 24 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார். இங்கிலாந்து கேப்டன் பட்லர் மற்றும் லிவிங்ஸ்டன் விக்கெட்டை அவர் வீழ்த்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருதை கேப்டன் ரோகித் சர்மா பெற்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in
