தர்மசாலா: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்களை குவித்தது. இதில் ட்ராவிஸ் ஹெட் 67 பந்துகளில் 109 ரன்களை குவித்து மிரட்டினார். டேவிட் வார்னர் 65 பந்துகளில் 81 ரன்களையும், மேக்ஸ்வெல் 41 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து, 389 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டெவோன் கான்வே 28 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து வில்யங் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரன் – டேரில் மிட்செல் கூட்டணி அமைத்து ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை விளாச, மிட்செல் 54 ரன்களில் அவுட்டானார். ஒருபுறம் ரச்சின் ரவீந்திரா நிலைத்து ஆட, மறுபுறம் வந்த டாம் லதம் 21 ரன்களிலும், க்ளென் பிலிப்ஸ் 12 ரன்களிலும் கிளம்பினர். பொறுப்புடன் ஆடிய ரச்சின் ரவீந்திரா 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் உலக கோப்பை ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தில் அதிவே சதமடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் நடப்பு தொடரில் இது அவரது இரண்டாவது சதம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரச்சின் ரவீந்திராவை பேட் கம்மின்ஸ் விக்கெட்டாக்க 116 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் சான்ட்னர் (17 ரன்கள்), மாட் ஹென்றி (9 ரன்கள்) வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இறுதி ஓவரில் ஜேம்ஸ் நீஷம் – ட்ரெண்ட் போல் களத்தில் இருக்கும்போது 2 பந்துகளில் 7 ரன்கள் அடிக்க வேண்டிய பரபரப்பான சூழலில் ஜேம்ஸ் நீஷம் ரன்அவுட் ஆனார். கடைசி பந்தில் லாக்கி பெர்குசன் ரன் எடுக்காமல் போக, ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், மேக்ஸ் வெல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
