மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஜாம்பவானும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் கடந்த சில வருடங்களாகவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தனது நண்பர்களுடன் இணைந்து ஆன்லைனில் நிதி திரட்டி வருகிறார் சேப்பல்.
நிதி நெருக்கடியில் இருப்பதை ஒப்புக்கொண்டு பேசியுள்ள கிரேக் சேப்பல், “நான் மிகப்பெரிய நெருக்கடியில் இருப்பதாக சொல்வதை விரும்பவில்லை. அதேநேரம், நான் ஆடம்பர வாழ்க்கை வாழவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். கிரிக்கெட் விளையாடியதால் நான் ஆடம்பரமாக வாழ்கிறோம் என பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். அப்படியல்ல. இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் பெறும் ஊதியங்கள், பலன்களை விட நாங்கள் பெற்றது குறைவுதான். எனது சகாப்தத்தில் என்னுடன் கிரிக்கெட் விளையாடிய இன்னும் சிலரும் உதவிகோரும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். குறிப்பாக இன்றைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அந்தக் காலத்து வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு போதுமான வருமானத்தை தரவில்லை என்றே நான் நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கிரேக் சேப்பலின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு, கடந்த வாரம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நிகழ்வில் நிதி திரட்ட இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலர் கலந்துகொண்டனர். சேப்பல் 1970-80-களில் ஆஸ்திரேலிய அணிக்காக 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 சதங்களை அடித்திருக்கிறார். மேலும் கேப்டனாக ஆஸ்திரேலியாவை 48 முறை வழிநடத்தியும் இருக்கிறார். 1984ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், ஆஸ்திரேலிய டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்களை (7110) எடுத்து, சர் டொனால்ட் பிராட்மேனின் 6996 ரன்கள் சாதனையை முறியடிதந்திருக்கிறார்.
கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்தக் காலகட்டங்களில் அவர் நிறைய சர்ச்சைகளை சந்தித்தார். குறிப்பாக, இந்திய அணியின் முன்னணி வீரர்களான சச்சின், கங்குலி போன்றோரை தொல்லை செய்ததாக பின்னாளில் அவர்கள் குற்றம்சாட்டியது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி
Publisher: www.hindutamil.in
