பெங்களூரு: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களம் கண்டது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவியுள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் இலங்கையும் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து, இந்தத் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இன்றைய போட்டியிலும் இங்கிலாந்து மோசமாகவே விளையாடியது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான் சுமாரான துவக்கமே கொடுத்தனர். காயம் காரணமாக இலங்கை வீரர் மதீஷா பதிரனாவும் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக இடம்பிடித்து நீண்ட நாள்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய ஏஞ்சலோ மேத்யூஸ் தனது முதல் ஓவரிலேயே மலான் விக்கெட்டை எடுத்தார். 28 ரன்களுக்கு மலான் விக்கெட்டாக, ஜோ ரூட் 5 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதன்பின் கேப்டன் ஜாஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் 1 ரன், மொயீன் அலி 15 ரன்கள் என இங்கிலாந்தின் முன்னணி வீரர்கள் இலங்கையின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ மட்டுமே ஓரளவுக்கு ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களுக்கும், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில் 33.2 ஓவர்களுக்கெல்லாம் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் லஹிரு குமரா 3 விக்கெட், ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் ரஜிதா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
நன்றி
Publisher: www.hindutamil.in