இந்த உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கை பெரிய அளவில் பெருகி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி, இந்திய அணி களத்தில் ஓவராக உணர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், பிற்பாடு இது எதிர்மறையாக முடிந்து விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
2023 ஐசிசி உலகக் கோப்பையில் அச்சுறுத்தும் ஒரு அணியாக இந்திய அணி மட்டுமே உள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்க அச்சுறுத்தலை நெதர்லாந்து முறியடித்தது. பாகிஸ்தானை, ஆஸ்திரேலியாவை இந்தியா பதம் பார்த்தது. இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் பதம் பார்த்தது. இந்திய அணியும் நியூஸிலாந்தும்தான் பெரிய வெற்றிகளை பெற்றுக் கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தும் ஆற்றலும் உடல் மொழியும், உணர்ச்சிகளும் நிச்சயம் இந்திய அணி மீது ‘ஒரு புதிய பயத்தை’ ஏற்படுத்துகிறது என்கிறார் இயன் ஹீலி.
இந்தியாவின் தொடக்க ஜோடியுடன் கூடிய டாப் 3 பேட்ஸ்மேன்களின் ஃபார்ம், ‘சும்மா அதிருதுல்ல’ என்கிற ரகம்போல தான் இருக்கிறது. விராட் கோலி சைலண்ட் கில்லராக உள்ளார். மிடில் ஆர்டரில் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் கே.எல்.ராகுல், பவுலிங்கில் ஜடேஜா, பும்ரா, சிராஜ், குல்தீப் என்று கலக்குகின்றனர். பீல்டிங்கும் குறை சொல்வதற்கில்லை. அனைத்துக்கும் மேலாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் புதிய முதிர்ச்சி தெரிகிறது. தன் கள வியூகத்தினாலும், அணுகுமுறையினாலும் எதிரணிக்கு கடும் அழுத்தங்களை கொடுக்கிறார். ஆகவே கபில் தேவ், தோனி வரிசையில் கோப்பையைத் தூக்குவார் ரோஹித் சர்மா என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியுள்ளது இப்போது.
ஆனால் இயன் ஹீலி இதையே எச்சரிக்கையாகச் சொல்கிறார். “இந்திய அணி வீரர்கள் ஓவராக உணர்ச்சி வயப்படுகின்றனர். ஆற்றலை அநாவசியமாகச் செலவழிக்கின்றனர். இந்திய வீரர்கள் தங்கள் உற்சாகத்தைக் கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்” என்று ஆஸ்திரேலிய வானொலி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயன் ஹீலி. மேலும் இதனால் இந்திய அணி மீது ஒரு புதிய பயம் உருவாகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இயன் ஹீலி கூறியதாவது, “அவர்கள் வெற்றிகளில் வெளிப்படுத்தும் ஆற்றலையும் உற்சாகத்தையும் பார்த்தால், இதனால் உணர்ச்சி அளவில் வீழ்ச்சியடையவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்பார்த்தவாறு சூழ்நிலைகள் போகாத போது உணர்ச்சி அவர்களை வீழ்த்திவிடும் என எனக்கு இந்திய அணியை நினைத்தால் ஒரு புதிய பயம் ஏற்படுகிறது. இந்திய வீரர்கள் முழு அளவில் ஆற்றலையும் உணர்ச்சியையும் செலுத்துகிறார்கள். கொஞ்சம் ஓவராக எமோஷன் காட்டுகிறார்கள்.
அவர்களது தீவிரம், அதாவது பீல்டர் சொதப்பினாலோ, பவுலர் சரியாக வீசாவிட்டாலோ அவர்களது உடல் மொழி ஒன்று அதி உற்சாகமாக இருக்கிறது, இல்லையெனில் ஓவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இப்படி ஓவராக எமோஷனலாவது, உற்சாகம் காட்டுவது கவலையளிக்கிறது. ஆனால் அவர்களிடம் ஒரு மிகப்பெரிய அணி உள்ளது என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை.
விராட் கோலி சாதாரணமாக அனைவரும் செய்யும் ஒரு பீல்டிங்கைச் செய்கிறார். உடனே ரசிகர்கள் அரிய பீல்டிங்கைக் கண்டது போல் எழுச்சி பெறுகின்றனர். அவர் தடுத்தது ஒரு சிறு சிங்கிள்தான். இப்பொழுதே இப்படி இருந்தால் இன்னும் அடுத்தடுத்த போட்டிகளில் இவர்களின் தீவிர உடல்மொழியும் உணர்ச்சிகளும் ஆற்றல்களும் முதலீடுகளும் எந்த நிலைக்குச் செல்லும் என்று தெரியவில்லை. இவை பிற்பாடு தேவைப்படும், இப்போதே அனைத்தையும் தீர்த்துவிடாதீர்கள்” என்கிறார் இயன் ஹீலி.
இயன் ஹீலி கிண்டல் செய்கிறாரா அல்லது உண்மையான அக்கறையுடன் எச்சரிக்கை செய்கிறாரா அல்லது ஆஸ்திரேலியா முன்பு களத்தில் செய்த அதே தீவிரச் செயல்களை இந்தியா இப்போது கைப்பற்றியுள்ளதே என்ற ஆதங்கமா என்று புரியவில்லை.
நன்றி
Publisher: www.hindutamil.in
