சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூஸிலாந்து அணி.
பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய நியூஸிலாந்து அணிக்கு கான்வே 20 ரன்களில் ஏமாற்றினாலும், வில் யங் இந்த முறையும் சிறப்பாக விளையாடினார். அவருக்கு ரச்சின் ரவீந்திரா பார்ட்னர்ஷிப் கொடுத்தார். ரச்சின் 32 ரன்களில் நடையைக்கட்ட சிறிதுநேரத்தில் அரைசதம் கடந்த யங்கும் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின் லாதம் – பிலிப்ஸ் கூட்டணி சிறப்பாக விளையாடியது. நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்த இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். லாதம் 68 ரன்களும், பிலிப்ஸ் 71 ரன்களும் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. ஆப்கன் தரப்பில் அஸ்மத்துல்லாஹ், நவீன் உல் ஹக் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
289 ரன்கள் இலக்கை துரத்திய ஆப்கன் அணி நியூஸிலாந்து பந்துவீச்சில் சுருண்டது. அந்த அணியின் ரஹ்மத் ஷா தவிர மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். அஸ்மத்துல்லா உமர்சாய் 27 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் நியூஸிலாந்து பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நியூஸிலாந்து தரப்பில் மிட்செல் சான்டனர் மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்டும், ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது நியூஸிலாந்து அணி.
இந்த வெற்றியின்மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை வகித்து வருகிறது நியூஸிலாந்து அணி.
நன்றி
Publisher: www.hindutamil.in