பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அக்டோபர் 23-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவராத்திரி விழா நேற்று (அக்.15) காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழா 9-ம் நாள் அக்.23-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 3 மணிக்கு மலைக்கோயிலில் இருந்து பராசக்தி வேல் புறப்பாடு ஆனதும் சன்னதி சாற்றப்படும்.
பராசக்திவேல் கோதைமங்கலம் கோதீஸ்வரர் கோயில் சென்று அம்பு போட்டு மீண்டும் மலைக்கோயிலுக்கு வந்த பின்பு இராக்கால பூஜை நடைபெறும். அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அனைத்து கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். படிப் பாதை, வின்ச் ரயில் மற்றும் ரோப் கார் வழியாக மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காலை 11 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அக்.24-ம் தேதி வழக்கம் போல் பூஜைகள், தங்க ரத புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
நன்றி
Publisher: www.hindutamil.in