அகமதாபாத்: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023, ஐசிசி உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ உலகக் கோப்பைப் போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் அணி இயக்குநர் மிக்கி ஆர்தர் எல்லோரும் மனதளவில் உணர்ந்திருப்பதை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்துள்ளார்.
அகமதாபாத்தில் பாகிஸ்தான் – இந்தியா போட்டியின் போது ரசிகர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று காட்டப்படவில்லை. அது ஒரு ரகசியம் போல மறைக்கப்படுகிறது. ஆனால் மைதானத்திலிருந்த பச்சை நிற சட்டைகளை (பாகிஸ்தான் ஜெர்ஸி) விரல் விட்டு எண்ணிவிடலாம். மொத்த பச்சை சட்டை 3 பேர். இவர்கள் அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்கள் என்று தெரிய வருகின்றது.
நிச்சயம் 1,15,000 ரசிகர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்த்திருப்பார்கள். நீல நிற (இந்திய ஜெர்ஸி) அலை மைதானத்தை மூழ்கடித்தது. ஆனால், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரரும் தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குநரான மிக்கி ஆர்தர், மைதானம் முழுக்க இந்திய ரசிகர்களாக இருந்ததுதான் தோல்விக்கான காரணம் என்று கூறவரவிலை. ஆனால் ஒற்றை ரசிகர் படை என்பதுதான் உண்மை என்கிறார்.
“(இந்த ஒற்றை ரசிகர் படை) எங்களைப் பாதிக்கவில்லை என்று நான் சொன்னால் அது பொய். நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இது ஐசிசி நிகழ்வு போல் அல்ல. பிசிசிஐ நிகழ்வு போல்தான் உள்ளது. இருதரப்பு தொடர்போல் இருந்தது. மைக்ரோபோனில் தில் தில் பாகிஸ்தான் சப்தம் கேட்கவே இல்லை.
ஆம், ஒற்றை ரசிக படை என்பது பாதித்தது. ஆனால் இதை தோல்விக்கான சாக்குப்போக்காக நான் கூற விரும்பவில்லை. ஏனென்றால் எங்களைப் பொறுத்தவரை அது அந்த தருணத்தில் வாழ்வது மட்டுமே. அடுத்த பந்து என்ன என்பதை பற்றியதுதான் எங்களின் பிரச்சனை. இந்திய வீரர்களை எப்படி கையாளப் போகிறோம் என்பதுதான் எங்களது பிரச்சனையே தவிர ரசிகர்களின் அடையாளம் என்பது அல்ல.” என்கிறார் மிக்கி ஆர்தர்.
பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா அளிக்கப்படவில்லை. பாகிஸ்தான் ஊடகங்களுக்கும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஊடகங்களின் செய்தி என்னவெனில் 355 ஊடகவியலாளர்கள் விசா கேட்டு அப்ளை செய்ததில் 60 ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு அதில் 3 பேர்தான் விசாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2011 உலகக் கோப்பையின் போது மொஹாலி அரையிறுதிக்கு மட்டுமே 6,000 விசாக்கள் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டன.
இதுபற்றி ஊடகவியலாளர் ஒருவர் மிக்கி ஆர்தரிடம் கேட்க, அவர், “பாருங்க! நான் இதில் கருத்து சொல்ல முடியாது. இது பற்றி கருத்துகூறி அபராதம் கட்ட விரும்பவில்லை” என்று நறுக்கென்று கூறிவிட்டார்.
பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் கிராண்ட் பிராட் பர்ன், “மைதானத்தில் நீல அலை (இந்திய ஜெர்ஸி) இருக்கும் என்பது தெரிந்ததுதான். ஆனால் எங்கள் அணி ஆதரவாளர்கள் இல்லாதது எங்களுக்கு வருத்தமே. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் வருவதை விரும்பவே செய்வார்கள் என்றே நான் கருதுகிறேன். எங்களுக்கு அது ஒரு உலகக் கோப்பை போட்டி போலவே இல்லை. உலக அளவில் பாகிஸ்தான் ரசிகர்கள் அன்று ஏமாந்திருப்பார்கள். நாங்கள் கிரிக்கெட் ரீதியாக அவர்களுக்கு நியாயம் செய்யவில்லை.” என்றார்.
நன்றி
Publisher: www.hindutamil.in
