நெல்லை: விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை ‘ஜெய்பீம்’ ஞானவேல் இயக்குகிறார். ரஜினியின் 170-வது படமான இதில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். மேலும் ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா , ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் அண்மையில் தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து வருகிறது.
இன்றைய (அக்.16) படப்பிடிப்பின்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படத்துக்குப் பிறகு நெல்லை வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள் என்றும் தெரிவித்தார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in