AI சூழ் உலகு 10 | விளையாட்டு உலகை ஆளும் ஏஐ தொழில்நுட்பம்!

‘மாற்றம் என்பது வாழ்க்கையின் எழுதப்படாத விதி. மேலும், கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமே பார்ப்பவர்கள் எதிர்காலத்தை இழக்க நேரிடும்’ என்பது முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடியின் கூற்று. இன்றைய டெக் யுகத்துக்கு கச்சிதமாக பொருந்தும் வகையில் 20-ம் நூற்றாண்டின் மையப் பகுதியில் அவர் இதனை சொல்லி இருந்தார்.

அந்த மாற்றத்தை விளையாட்டு உலகமும் எதிர்கொண்டு வருகிறது. ஆதிகாலத்தில் உதயமான விளையாட்டுகள் கூட இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றம் கண்டுள்ளன. அதில் பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகம் இணைந்துள்ளன. அதற்கு சிறந்த உதாரணமாக கிரிக்கெட் விளையாட்டை சொல்லலாம். டெஸ்ட் வடிவில் இருந்த கிரிக்கெட் விளையாட்டு ஒருநாள், டி20 என பல்வேறு ஃபார்மெட்களில் மாற்றம் கண்டு டி10, தி ஹன்ட்ரட் என மாற்றம் பெற்றுள்ளது. அதிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விளையாட்டு உலகில் நீடித்த நிலையான ஆட்சியை புரிய உள்ளது.

கமென்டரி பணியில் ஏஐ: விளையாட்டு ஒளிபரப்பில் சுவாரஸ்யம் சேர்ப்பதே வர்ணனை தான். தனது காந்தக் குரலால் தமிழ் கிரிக்கெட் வர்ணனைக்கு அழகு சேர்த்தவர் காலஞ்சென்ற அப்துல் ஜப்பார். அவரை போலவே பல்வேறு மொழிகளில் விளையாட்டுப் போட்டிகளை வர்ணனை செய்யும் ஆளுமைகள் பிஸியாக இயங்கி வரும் வேளையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையோடு ஏஐ வர்ணனையாளரை அறிமுகம் செய்துள்ளது ஐபிஎம்.

ஜெனரேட்டிவ் ஏஐ பிளாட்பார்மான Watsonx மூலம் இதனை சாத்தியம் செய்துள்ளது ஐபிஎம். இதனை 2023-ல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், மாஸ்டர்ஸ் கோல்ஃப் போன்ற தொடர்களில் வெள்ளோட்டம் பார்த்தது ஐபிஎம். இன்னும் நேரலையில் ஏஐ தனது வர்ணனை பணியை தொடங்கவில்லை. ஹைலைட்ஸ் வீடியோக்களை கொண்டு போட்டிகளை வர்ணனை செய்துள்ளது Watsonx. இதற்காக டென்னிஸ் மற்றும் கோல்ஃப் விளையாட்டு சார்ந்த சகலமும் அதற்கு கோடிங் செய்து ஞானம் கொடுத்துள்ளனர் புரோகிராமர்கள். வரும் நாட்களில் நேரலையிலும் ஏஐ தனது வர்ணனை பணியை தொடங்கலாம்.

தொழில்நுட்பத்தின் துணையுடன் மக்களின் மனம் கவர்ந்த காலஞ்சென்ற வர்ணனையாளர்களின் குரலை குளோன் செய்து ஏஐ உருவில் உயிர் பெற செய்யலாம். அதே நேரத்தில் ஏஐ வர்ணனையின் நம்பகத்தன்மை மற்றும் புரோகிராம் செய்யப்பட்ட அதன் செயற்கை பேச்சும் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்கும் என்பதை பார்க்க வேண்டி உள்ளது. ஏனெனில், இது குறித்து சிலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

ரோபோக்களின் உதவி: கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் புதிதாக களம் காணும் எதிரணி பவுலர் அல்லது பேட்ஸ்மேனின் ஆட்டத்திறனை கணிப்பது ஓர் அணிக்கு கொஞ்சம் சவால். சில போட்டிகளுக்குப் பிறகு அவர்களது திறன் சார்ந்த தரவுகளின் அடிப்படையில் அவர்களை எப்படி எதிர்கொள்ளலாம்/கட்டுப்படுத்தலாம் என திட்டம் வகுக்கப்படும். உதாரணமாக, 2023 தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட வந்திருந்தபோது இந்திய வீரர் அஸ்வினின் பந்துவீச்சை சமாளிக்க அவரை போலவே பந்து வீசும் வீரரை கொண்டு பயிற்சி செய்தனர். இந்த மாற்று ஏற்பாடு அனைவருக்கும் கிடைக்காது.

கால்பந்தாட்ட கோல் கீப்பருக்கு ரொனால்டோ அல்லது மெஸ்ஸியின் ஸ்ட்ரைக்கை தடுக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்கும். அதற்காக அவர்களது டூப்களை கொண்டு வர வேண்டியது இல்லை. ரோபோக்கள் போதும். அதற்கான வேலையை செய்ய. இதனை மேலும் துல்லியம் ஆக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ரோபோக்கள் உலகின் முன்னணி பவுலர்களை நகல் எடுத்தது போலவே வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும். அவர்களது திறனை பயிற்சியின்போது அது பிரதிபலிக்கும். இதே நிலை மற்ற விளையாட்டுகளிலும் உருவாகலாம்.

ஸ்மார்ட்டான அல்லது சென்சார் பொருத்தப்பட்ட பந்துகள் மற்றும் பிற விளையாட்டு உபகரணங்களில் தொழில்நுட்ப கருவிகள் இடம்பெறும். இதன் மூலம் வீரர்களின் களத்திறன் சார்ந்த நிகழ் நேர செயல்பாட்டு தரவுகளை சேகரிக்க முடியும். விர்ச்சுவல் முறையில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வாய்ப்பு இருக்கும். 2022 ஃபிபா கால்பந்தாட்ட உலகக் கோப்பை தொடரின் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பந்துகளில் சென்சார் பொருத்தப்பட்டு இருந்தது. இது ஆட்டத்தின் போது வீரர்களின் லேசான டச்களை கூட நடுவர்களால் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் போர்ச்சுகல் மற்றும் உருகுவே (2022 உலகக் கோப்பை) அணிகளுக்கு இடையிலான போட்டியில் கோல் பதிவு செய்தது போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோவா அல்லது ப்ரூனோவா என்ற குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டது. அதே போல கால்பந்து ஆட்டத்தில் பெரிய தலைவலியாக இருக்கும் ஆஃப்-சைட் குழப்பத்துக்கும் தொழில்நுட்பம் உதவி வருகிறது.

வீரர்களின் செயல்திறனைக் கணிக்க, கண்காணிக்க: ஆட்டத்தின்போது வீரர்களின் செயல்திறனை கணிக்கும் மற்றும் கண்காணிக்கும் திறன் கொண்ட ஏஐ டூல்கள் பயன்பாட்டில் உள்ளன. அமெரிக்காவின் மேஜர் லீக் பேஸ்பால் தொடரில் ஸ்டார்காஸ்ட் எனும் டூல் இந்த பணியை செய்துள்ளது. இதே போல கிரிக்கெட் தொடங்கி பல்வேறு விளையாட்டுகளில் ஒவ்வொரும் பந்துக்கும் வீரர்களின் திறனை கண்காணிக்கும் வல்லமை கொண்ட ஏஐ டூகள் உள்ளன. 2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுப் வீசிய பந்தில் கோலி அடித்த சிக்ஸர் அவரது பேட்டிங் கிளாஸை வெளிக்காட்டியது. அந்த ஷாட்டை அவர் ஆடியது எப்படி? அவரது உடல் ஜெனரேட் செய்த பவர் போன்றவற்றை அறிய இந்த ஏஐ டூல் மூலம் அறிந்து கொள்ளலாம். கூகுள், அடிடாஸ் இணைந்து ஸ்மார்ட் ஷூ சோல் ஒன்றை வடிவமைத்தன. மெஷின் லேர்னிங் துணையுடன் அதை தனது ஷூ-வில் அணிந்து ஆடும் நகர்வுகளை கணிக்கலாம். ஃபார்முலா 1 ரேசிங்கிலும் ஏஐ சிமுலேஷன் பயன்படுத்தப்படுகிறது.

ஏஐ துணையுடன் விளையாட்டு உபகரணங்கள் வடிவமைப்பு: விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு உகந்த வகையில் தங்களது விளையாட்டு சார்ந்த உபகரணங்களை வடிவமைக்க வழி செய்கிறது ஏஐ. நியூஜெர்சியை சேர்ந்த டிசைன் ஸ்டூடியோ ஒன்று கிளாசிக் ரக டென்னிஸ் ராக்கெட் (பேட்) வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது. இதற்கு டெக்ஸ்ட்-டு-இமேஜ் ஏஐ டூல் பயன்படுத்தப்பட்டது. இது போல விளையாட்டு வீரர்களும் தங்களுக்கான உபகரணங்களை வடிவமைக்கலாம்.

பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவம்: ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தொழில்நுட்ப வரவு புதுவித அனுபவத்தை வழங்கும். செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் என டிஜிட்டல் உருவில் மாற்றம் கண்டுள்ளது. நாளுக்கு நாள் விளையாட்டு போட்டிகளை டிஜிட்டல் முறையில் பார்க்கும் பயனர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே உள்ளது. அதன் மூலம் அது சார்ந்த வணிகத்துக்கு டிமாண்ட் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவம் தரும் வகையில் மல்டி கேமரா பார்வை அனுபவம் என்பதில் தொடங்கி தனித்துவ கம்யூனிகேஷன், அவர்களது ஆக்டிவ் பங்களிப்பு போன்றவற்றை பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும். அதோடு தங்கள் மனம் கவர்ந்த வீரர்களுடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளும் விர்ச்சுவல் மாயை போன்றவையும் நடக்கும். அது எப்படி இருக்கும் என்றால் தோனியின் பேட் வீச்சுடன் தங்களது பேட் வீச்சின் வேகத்தை பார்வையாளர்கள் ஒப்பிட்டு பார்க்க முடியும். நிகழ் நேரத்தில் பல்வேறு தரவுகளை ஏஐ துணை கொண்டு அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் இருதரப்புக்கும் ஆதாயம். அதே போல போட்டியில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகளிலும் ஏஐ உதவி நாடப்படும்.

விளையாட்டில் சிறந்த விளங்கும் வீரர்களை எந்திரங்கள் வீழ்த்திய கதையை நாம் அறிந்திருப்போம். இப்போது அது விளையாட்டு உலகை ஆட்சி செய்ய உள்ளன.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *