ஹாங்சோ: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் உள்ள லோட்டஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) வண்ணமயான நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இந்தியா இதுவரை 3 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் பதக்கப் பட்டியல்:
* மகளிர் 10m துப்பாக்கிச் சுடுதல்: ஆஷி சவுக்ஷி, மெகுலி கோஷ் ரமிதா ஆகிய வீராங்கனைகள் அடங்கிய குழு வெள்ளி பதக்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பதக்கப் பட்டியல் கணக்கை துவக்கி வைத்தது.
*ஆடவர் லகு ரகு டபுல்ஸ் ஸ்கல்ஸ்: வெள்ளி.
*ஆடவர் துடுப்புப் படகு செலுத்துதல் (2 வீரர்கள் கொண்ட போட்டி): வெண்கலம்.
*ஆடவர் துடுப்புப் படகு செலுத்துதல் (8 வீரர்கள் கொண்ட குழு நிகழ்வு): வெள்ளி.
*மகளிர் 10m துப்பாக்கிச் சுடுதல் (தனிநபர்): வெண்கலம்.
ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு ஆசிய விளையாட்டு பெரிய அளவிலான போட்டியாக திகழ்கிறது. 2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போடடியில் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். வரும் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 655 பேர் பங்கேற்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா 8-வது நாடாக வலம் வந்தது. இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைய்ன் ஆகியோர் இணைந்து தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
இறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி: ஆசிய விளையாட்டுப் போட்டியில்,20 ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அண் 8.2 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
நன்றி
Publisher: www.hindutamil.in