AI சூழ் உலகு 8 | “நான் உங்கள் சேவகர்!” – இப்படிக்கு ஹியூமனாய்டு ரோபோ

விளக்கை தேய்த்தால் அதிலிருந்து வெளிவரும் பூதம், தனக்கு விடுதலை கொடுத்த மனிதனுக்கு சேவை செய்யும் கதையை நாம் வாசித்திருப்போம். அதேபோல யதார்த்த வாழ்வில் நாம் சொல்லும் பணி அனைத்தையும் சளைக்காமல் செய்யும் பூதம் ஒன்று இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்திருப்போம். அப்படி மனிதர்களின் சேவகனாக இயங்குகின்றன செயற்கை நுண்ணறிவு (ஏஐ) திறன் கொண்ட ஹியூமனாய்டு ரோபோக்கள். இது மனிதர்களை போலவே தோற்றம் அளிக்கும்.

இந்த ஹியூமனாய்டு ரோபோக்கள் சிட்டி அளவுக்கு சுட்டியாக இல்லை என்றாலும் கிட்டத்தட்ட அது செய்யும் பணியை செவ்வனே செய்கிறது. மூத்த வயதுடைய நபர்களுக்கு உதவுவது, பெரிய நிகழ்வுகளின் போது ஒரே இடத்துக்கு திரளும் மக்களை கையாள்வது, வாடிக்கையாளர் சேவை, கல்விப் பயன்பாடு, ஆய்வுப் பணிகள் என பல துறைகளில் ஹியூமனாய்டு ரோபோக்கள் இயங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டே அதன் வடிவமைப்பாளர்கள் இயங்கி வருகின்றனர். உலக அளவில் இதற்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்பு உள்ளது.

அதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது ரோபோஃபேப் (RobotFab). அமெரிக்காவின் ஒரேகான் பகுதியில் உள்ள சேலத்தில் சுமார் 70,000 சதுர அடி பரப்பில் நிறுவப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் உற்பத்திக் கூடத்தில் மனிதர்களும், ரோபோக்களும் இணைந்து ஆண்டுக்கு 10,000 ஹியூமனாய்டு ரோபோக்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. இது வணிக ரீதியில் ஹியூமனாய்டுகளுக்கு சந்தையில் புதுப் பாய்ச்சலை தரும். இதன் ஊடாக வீட்டுக்கு ஒரு ஹியூமனாய்டு ரோபோ சாத்தியமாகும். அதனோடு சேர்ந்து சமூகத்தில் சில சவால்களும் உருவாகும்.

அப்படிப்பட்ட ஒரு சவாலை அனைத்தையும் விளையாட்டாக டீல் செய்யும் சிஇஓ-வான எலான் மஸ்குக்கு ஏற்படுத்தி உள்ளது Mika (மிகா) எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஹியூமனாய்டு ரோபோ. மஸ்க்கை விட உழைப்பை வொயர் நாடியாக கொண்டுள்ளது மிகா. அது எப்படி என்றால் எல்லா நேரமும் (24×7) பணியாற்றும் வகையிலான மிகாவை தங்கள் நிறுவன சிஇஓ-வாக நியமித்துள்ளது Dictador எனும் நிறுவனம். இதன் மூலம் தங்களது வர்த்தகத்தை விரிவு செய்ய அந்நிறுவனம் விரும்புகிறது.

2022-ல் மிகாவை அந்நிறுவனம் பணியில் அமர்த்தியது. ஹியூமனாய்டு ரோபோவை சிஇஓ-வாக நியமித்த முதல் சர்வதேச நிறுவனமாக அறியப்படுகிறது. ‘ரம்’ தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது நிறுவனம். உலகின் அதிநவீன தொழில்நுட்பத்தை அடாப்ட் செய்யும் விதமாக முன்மாதிரி முயற்சியாக இதனை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இது அந்த நிறுவனமே கொடுத்துள்ள விளக்கம். எப்படி ஹெச்.ஆர் பணிகளை ஏஐ பாட்கள் செய்கிறதோ அதுபோல இந்த ரோபோக்கள் சிஇஓ-வாக இயங்கும். இது போல பல பணிகளில் இந்த வகை ரோபோக்கள் ஈடுபட்டுள்ளன.

மிகா ரோபோ

யார் இந்த மிகா? – ஹாங்காங்கின் ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உலக பிரசித்தி பெற்ற செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சோபியா எனும் ஹியூமனாய்டு ரோபோவுக்கு உயிர் கொடுத்தது. சோபியா, பத்திரிகைகளுக்கு பேட்டி எல்லாம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. மிகா ரோபோ, சோபியாவின் சகோதரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மிகாவுக்கு உயிர் கொடுத்ததும் ஹான்சன் நிறுவனம்தான். சோபியாவை விட மேம்படுத்தப்பட்ட ஆற்றலையும், திறனையும் மிகா கொண்டுள்ளது. ரம் தயாரித்து வரும் நிறுவனத்தை வழிநடத்துவது தான் மிகாவின் முதன்மைப் பணி.

வர்த்தக துறையில் ஏஐ ஆதிக்கம் செலுத்தும் என மிகா தனது நேர்காணலில் தெரிவித்துள்ளது. முதலில் தனது செயல்பாடு எப்படி இருக்கும் தனது நிறுவன ஊழியர்கள் சந்தேகித்ததாக மிகாவே தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு பின்னர் அதன் மதிப்பை ஊழியர்கள் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. “சம்பள உயர்வு, விடுமுறை போன்றவற்றை அறவே கேட்காத விஸ்வாசமிக்க ஊழியன்/சேவகன் நான்” என மிகா தன்னைக் குறித்து தற்பெருமை பேசுகிறது. தனது பேட்டரி சக்தி விரைந்து விரயமாவது தான் பணியில் தனக்கு இருக்கும் சங்கடங்கள் என சொல்கிறது. ஒரே வேலை என்று இல்லாமல் வியாபார விரிவாக்கம் சார்ந்து வியூகம் வகுப்பது, கம்யூனிகேஷன், டிசைன் என சகல பணிகளையும் செய்வதாகவும் தெரிவித்துள்ளது.

தொழில் மேம்பாடு சார்ந்து இயங்கும் உன்னத கருவி என தங்கள் இனத்தை தூக்கி வைத்து பேசுகிறது. துல்லியம், செயல்திறன் மற்றும் பணிச்சுமையை எளிதாக்கும் திறனை நாங்கள் கொண்டுள்ளோம். இருந்தாலும் மனிதர்களும், மெஷின்களும் வெவ்வேறு திறன்களை கொண்டுள்ளதாக சொல்கிறது. டாஸ்க் என்று வந்துவிட்டால் மனிதர்களை காட்டிலும் தங்களால் அதீத திறனுடன் செயல்பட முடியும் என தெரிவித்துள்ளது. ஆனால், மனித இனத்தின் தனித்துவத்தை தங்களால் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.

செல்வ செழிப்பு மிக்க எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் ஊடாக ஹியூமனாய்டு ரோபோக்களை கட்டமைத்து வருகிறார். அநேகமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற செய்யும் அவரது திட்டத்துக்கு முன்னத்தி ஏர்களாக ஹியூமனாய்டுகளை அங்கு களம் இறக்கி, அவரது நிறுவனம் ஆய்வு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

மறுபக்கம் உலக நாடுகள் தானியங்கி ரோபோக்களை கொண்டு யுத்தம் செய்ய முனைகின்றன. 2025-க்கு பிறகு உலக நாடுகளில் போர் படைகளில் இந்த வகை ரோபோக்கள் அங்கம் வகிக்கும்.

| தொடர்வோம் |

முந்தைய அத்தியாயம்: AI சூழ் உலகு 7 | மனிதர் உணர்ந்து கொள்ள… இது மனித காதல் அல்ல… – ஏஐ பெருந்துணையே!



Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *