1975-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றன. சர்வதேச அரங்கில் வெறும் 18 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைபெற்றிருந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டது. டெஸ்ட் போட்டி அந்தஸ்து பெற்றிருந்த ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்புநாடுகளான இலங்கை, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் கலந்து கொண்டன. இதில் கிழக்கு ஆப்பிரிக்கா அணியில் கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜாம்பியா ஆகிய நாடுகளை உள்ள சேர்ந்த வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்தத் தொடரில் இடம் பெற்ற ஆட்டங்கள் வெறும் 5 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. 3 நாட்களில் லீக்ஆட்டங்கள் முடிவடைந்தன. 2 அரை இறுதி ஆட்டங்கள் ஒரே நாளிலும், இறுதிப் போட்டி ஓர் நாளிலும் நடைபெற்றது. லீக் சுற்றுகளின் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 93 ரன்களில் சுருட்டியது ஆஸ்திரேலிய அணி. எளிதான இலக்கை துரத்திய போதிலும் 6 விக்கெட்களை பறிகொடுத்த பின்னர்தான் வெற்றி கோட்டை கடந்தது இயன் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி.
மற்றொரு அரை இறுதியில் நியூஸிலாந்து அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இறுதிப் போட்டியில் கிளைவ் லாய்டின் அதிரடி சதத்தால் (85 பந்துகளில், 102 ரன்கள்) 292 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மேற்கு இந்தியத் தீவுகள். இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியானது கீத் பாய்ஸின் மித வேகப்பந்து வீச்சு, அற்புதமான முக்கியமான 3 ரன் அவுட்கள் ஆகியவற்றால் 274 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் உலகக் கோப்பையின் முதல் சாம்பியன் ஆனது.
பட்டம் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு வெள்ளியிலான கோப்பையுடன் பரிசுத் தொகைய அப்போதைய இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.72 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த ஆஸ்திரேலியா ரூ.36 ஆயிரம் பெற்றது.
ஆமை வேகத்தில் கவாஸ்கர்: 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற அனுபவத்துடன் தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராகவன் தலைமையில் உலகக் கோப்பையில் களமிறங்கிய இந்திய அணி ஒரே ஒரு வெற்றி பெற்று வெறும் கையுடன் தாயகம் திரும்பியது. அந்த வெற்றியும் பலவீனமான ஆப்பிரிக்க அணிக்கு எதிராக கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 335 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 60 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடக்க வீரரான சுனில் கவாஸ்கர் 174 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். அவரது விசித்திரமான இந்த இன்னிங்ஸ் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்திய அணியின் மேலாளர் குலாப்ராய் ராம்சந்த், “மிகவும் இழிவான மற்றும் சுயநலம் கொண்ட பேட்டிங் செயல்திறன்” என கவாஸ்கரின் ஆட்டத்தை வெளிப்படையாக விமர்சித்தார்.
காலை உடைத்த ஜெஃப் தாம்சன்: லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 329 ரன்கள் இலக்கை இலங்கை அணி துரத்தியது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சன் இலங்கை அணியின் 2 பிரதான பேட்ஸ்மேன்களை காயம் அடையச் செய்து களத்தில் இருந்து வெளியேற்றினார். முதலில் துலீப் மெண்டிஸ், தாம்சனின் பவுன்சரில் தலையில் அடிபட்டு ‘ரிட்டயர்டு ஹர்ட்’ முறையில் நடையை கட்டினார். அதன் பின்னர் சுனில் வெட்டிமுனியை தொடக்கத்தில் சில பவுன்சர்களால் மிரட்டிய தாம்சன், அதன் பின்னர் துல்லியமான யார்க்கரால் அவரது காலை பதம் பார்த்தார். பலத்த காயம் அடைந்த அவர், களத்தில் இருந்து வெளியேறினார். இந்த ஆட்டத்தில் இலங்கை 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.
பங்கேற்ற அணிகள்

இறுதிப் போட்டி

அதிக ரன்கள், விக்கெட்கள்
நன்றி
Publisher: www.hindutamil.in
