மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்து 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூஸிலாந்து அணி.
மான்செஸ்டர் நகரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 60 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்களும், கேப்டன் ஜாஸ் பட்லர்13 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வில் ஜேக்ஸ் 19, டேவிட் மலான் 0 ரன்களில் வெளியேறினர். ஹாரி புரூக் 36 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். நியூஸிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.
199 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியானது 13.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிம் ஷெய்பர்ட் 39, கிளென் பிலிப்ஸ் 22, மார்க் சாப்மேன் 15 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. ஃபின் ஆலன் 3, டேவன் கான்வே 2, டேரில் மிட்செல் 0, மிட்செல் சாண்ட்னர் 8, ஆடம் மில்ன் 2, டிசம் சவுதி 8, லாக்கி பெர்குசன் 0 ரன்களில் நடையை கட்டினர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 4, ஆதில் ரஷித் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி4 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. லீ செஸ்டர் ஸ்டிரீட்டில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது ஆட்டம் பர்மிங்காமில் இன்று நடைபெறுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in
