பல்லேகலே: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இடைவிடாத மழையால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.
முன்னதாக, இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். சுப்மன் கில் நிதாமன் கடைபிடிக்க, ரோஹித் சர்மா 2 ஃபோர்களை அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 5ஆவது ஓவரில் ஷாகீன் அப்ரீடி வீசிய பந்தில் போல்டானார். 11 ரன்களில் கிளம்பினார்.
‘சிங்கம் களம் இறங்கிடுச்சு’ என ரசிகர்களின் ஆரவாரத்தில் நடந்து வந்த விராட் கோலி ஃபோர் அடிக்க கருமேகங்கள் சூழ்ந்திருந்த மைதானத்தில் வெளிச்சம் பிறந்தது. ஆனால் மீண்டும் அப்ரீடி தன்னுடைய தோழன் ரோஹித் சர்மாவைப்போலவே கோலியையும் போல்டாக்கி சமன்படுத்தினார். 4 ரன்களை மட்டுமே கோலி எடுத்தார். 7 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 30 ரன்களை எடுத்திருந்தது.
அடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் வந்தார். 14 ரன்களைச் சேர்த்தார். வெளியேறினார். இப்படியான ஒரு ரணகளத்திலும் எதுவுமே நடக்காதது போல மறுபுறம் சுப்மன் கில் 21 பந்துகளில் 6 ரன்களை மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டிருந்தார். 12ஆவது ஓவரில் மழை எட்டிப்பார்க்க ஆட்டம் தாமதமானது. அடுத்து 10 ரன்களில் ஹரிஸ் ரவூப் வீசிய பந்தில் கில் போல்டாகி வெளியேறினார். 15 ஓவர் முடிவு 4 விக்கெட் இழப்புக்கு இந்தியா 72 ரன்கள் சேர்ப்பு.
இப்படியான நிலையில்தான் ஹர்திக் பாண்டியா களத்துக்கு வந்தார். ‘ஆட்டம் இனி தான் ஆரம்பம்’ என ரசிகர்கள் உற்சாகமடைய, இஷான் கிஷன் – ஹர்திக் பாண்டியா இணை கைகோத்து பாகிஸ்தான் பந்துகளை அடித்து துவம்சம் செய்தனர். பெவிலியனிலிருந்து பார்த்த விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் அப்படியொரு மகிழ்ச்சி. விக்கெட்டை பறிகொடுக்காமல் முழு ஆட்டத்தையும் லாவகமாக வசப்படுத்திய இந்த இணை அரைசதத்தை கடந்து ரன்களை குவித்தது.
கடைசியாக 37ஆவது ஓவரில் ஹரிஸ் ரவூப், இஷான் கிஷனின் விக்கெட்டை கைப்பற்றினார். 81 பந்துகளில் 82 ரன்களுடன் நடையை கட்டினார் இஷான். 40 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்களை இந்தியா சேர்ந்திருந்தது. 43ஆவது ஓவரில் ஹர்திக் பாண்டியா 87 ரன்களுடன் அவுட்டானார். அதே ஓவரில் ரவீந்திர ஜடேஜா 14 ரன்களில் விக்கெட். அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் 3 ரன்களில் கிளம்பினார்; தொடர்ந்து குல்தீப் யாதவ் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப ஆட்டம் மெல்ல மெல்ல பாகிஸ்தான் பக்கம் திரும்பியது. 48ஆவது ஓவரில் பும்ரா 14 ரன்களுடன் அவுட்டாக ஆட்டம் முடிந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 266 ரன்களைச் சேர்த்தது.
பாகிஸ்தான் அணி தரப்பில், ஷாகின் அஃபரீடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவூப், நஸீம் ஷா தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
நன்றி
Publisher: www.hindutamil.in