புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் உள்நாட்டு போட்டிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமத்தை சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு வாங்கி உள்ளது வயாகாம் 18 நிறுவனம்.
தொலைக்காட்சி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்துக்காக பிசிசிஐ தனித்தனியே நடத்திய இணையவழி ஏலத்தில் ஸ்டாா் இந்தியா, சோனி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஒளிபரப்பு உரிமத்தை ரூ.5,963 கோடிக்கு கையகப்படுத்தியிருக்கிறது வயாகாம் 18 நிறுவனம்.
டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.3,101 கோடிக்கும், தொலைக்காட்சி உரிமத்தை ரூ.2,862 கோடிக்கும் வாங்கி உள்ளது. இந்த உரிமம் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே வரும் 22-ம் தேதி தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தொடங்கி வரும் 2028-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான போட்டியை உள்ளடக்கி இருக்கிறது.
இந்த ஒளிபரப்பு உரிமத்தில் இந்திய அணி பங்கேற்கும் 25 டெஸ்ட், 27 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 36 டி 20 ஆட்டங்கள் என மொத்தம் 88 சர்வதேசபோட்டிகள் அடங்கும். அந்த வகையில் ஒரு ஆட்டத்துக்கு ரூ.67.76 கோடியை பிசிசிஐ-க்கு வயாகாம் 18 நிறுவனம் வழங்கும். இது கடந்த 5 ஆண்டு சுழற்சியில் ஒரு போட்டியின் மதிப்பான ரூ.60 கோடியை விட ரூ.7.76 கோடி அதிகம்.
கடந்த 5 ஆண்டு ஒளிபரப்பு உரிமத் தொகையுடன் ஒப்பிடுகையில் தற்போது பிசிசிஐ-க்கு நடப்பு சுழற்சியின் வருவாயில் ரூ.175 கோடி குறைவாகவே கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த சுழற்சியில் 102 ஆட்டங்கள் இருந்ததால், அதன் ஒளிபரப்பு உரிமத்தை ஏலத்தில் விட்டதன் மூலம் பிசிசிஐ ரூ.6,138 கோடியை பெற்றிருந்தது.
நன்றி
Publisher: www.hindutamil.in
