கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நாளை குரூப் சுற்றுப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை புகழ்ந்துள்ளார் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இம்முறை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறுகின்றன. செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் கலந்து கொண்டுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நாளை இலங்கையில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
“விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர். மிகவும் இக்கட்டான சூழலில் இருந்து அணியை வெற்றி பெற செய்யும் திறன் படைத்தவர். அது எப்படி என்றால் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் எங்கள் வசம் இருந்த வெற்றியை பறித்தது போல” என ஷதாப் கான் தெரிவித்துள்ளார். கோலியை புகழ்ந்த காரணத்தால் அவரை பாகிஸ்தான் ரசிகர்கள் சாடி வருகின்றனர்.
இந்த சூழலில் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கான ஆடும் லெவனை அறிவித்துள்ளது பாகிஸ்தான். பாபர் அஸம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஃபகர் ஜமான், இமாம்-உல்-ஹக், சல்மான் அலி அகா, இஃப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி, ஹாரிஸ் ரஃப்.
நன்றி
Publisher: www.hindutamil.in
