ஆசியக் கோப்பை | “பாபர் அசாம் போல ஆடுங்கள்” – இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்

இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் நாளை (செப்.2) நடைபெறவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்தியாவின் கை சற்றே ஓங்கியிருக்கிறது என்றாலும், பாகிஸ்தான் இப்போது இடைவெளியைக் குறைத்திருப்பதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளதுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்தியா வெற்றி பெறும் அணியாகத் தொடங்கும் என்று கூறுகிறேன். 2011-க்குப் பிறகு இந்த அணிதான் இந்தியாவின் வலுவான அணியாகும். பல கலவையான வீரர்கள் உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மா நன்கு புரிந்தவர். சூழலையும் வீரர்களையும் புரிந்தவர். எதிரணியினரையும் அறிந்தவர். ஆனால் இதைச்சொல்லும் போதே நாம் இன்னொன்றையும் கவனத்தில் கொள்வது நல்லது. பாகிஸ்தான் இப்போது நல்ல முன்னேற்றமடைந்த அணியாக உள்ளது. இடைவெளியைக் குறைத்துள்ளனர்.

ஒரு 7-8 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வீரருக்கு ஒருவர் என்று ஒப்பிட்டால் இரு அணிகளுக்கும் இடையே இடைவெளி இருக்கும். ஆனால் பாகிஸ்தான் இப்போது இடைவெளியை குறுக்கியுள்ளனர். இப்போது பாகிஸ்தான் மிக சிறந்த அணியாக உள்ளது, ஆகவே இந்திய அணியினர் தங்கள் ஆட்டத்தின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் என்பதற்காக வீரர்கள் பதற்றமடைய வேண்டியதில்லை. இதையும் மற்ற போட்டி போல் கருதி ஆட வேண்டும். இதுதான் முக்கியமானது. ஓவர் ஹைப்பினால் வீரர்கள் மனது வித்தியாசமாக சிந்திக்கக் கூடாது. தனிப்பட்ட வீரரின் ஆட்டம் மற்ற ஆட்டங்களில் எப்படியோ இதிலும் இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அடி மனதில் இருக்கும் அழுத்தத்தினால் மனத்தளவில் கடினமான வீரர்கள் சகஜமாக ஆடுவார்கள்.

இரு அணி வீரர்கள் சேர்க்கையைப் பார்க்கும் போது அட்டகாசமாக உள்ளது. இந்தப் போட்டி நிச்சயம் ஒரு பெரிய கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் யார் அழுத்தத்தை சிறப்பாகக் கையாள்கிறார்கள் என்பதில்தான் போட்டியின் சாராம்சம் அடங்கியுள்ளது. எந்த வீரர் அமைதியாக விஷயங்களைக் கையாள்கிறாரோ, சிந்திக்கிறாரோ அவர் பெரும்பாலும் இத்தகைய பெரிய போட்டிகளை அனாயசமாக கடந்து செல்வார்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் அணித்தேர்வு செய்யும் போது ஃபார்மை வைத்து தேர்வு செய்யக்கூடாது. மனதளவில் தைரியமாக உள்ள வீரர்கள் சிலர் கடந்த ஆறு மாதங்களில் பெரிய இன்னிங்ஸ்களைக் கூட ஆடியிருக்க மாட்டார்கள். ஆனால் இந்தியா – பாகிஸ்தான் என்றால் அவர்கள் எழுச்சி காண்பார்கள். போட்டியின் முக்கியத்துவம் இவர்களுக்குத் தெரியும். இந்தப் போட்டியில் சரியாக ஆடினால் அது அவர்களுக்கு எப்படி தூண்டுதலாக அமையும் என்பதும் அவர்களுக்குத் தெரியும், அவர்களது உவகை பெரிய அளவில் இப்போட்டிகளின் போது இருக்கும்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 30, 40 தொடக்கங்களை சதமாக மாற்றுகிறார். இவரைப்போல்தான் இந்திய டாப் ஆர்டரும் யோசிக்க வேண்டும். எனவே களத்தில் இறங்கி அதிகப்பந்துகளை எதிர்கொள்ளுங்கள். அணியின் டாப் 3 வீரர்கள் சதமெடுக்கிறார்கள் என்றால் ஸ்கோர் 300. அதே போல்தான் இந்திய டாப் ஆர்டர் பேட்டர்கள் சிந்திக்க வேண்டும்.

பீல்டிங்கும் மிக முக்கியம். இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றார்கள் என்றால் அது அவர்கள் பீல்டிங்கினால்தான். 1996 முதல் துணைக்கண்டத்தில் இலங்கை அணி சிறந்த பீல்டிங் அணியாகத் திகழ்கிறது. கடந்த ஆசியக் கோப்பையில் இலங்கை பீல்டிங் தனித்துவமாக இருந்தது. அவர்கள் சாம்பியன்கள் அதை மறந்து விட வேண்டாம். அதுவும் அவர்கள் மண்ணில் அவர்கள் தாதாக்கள். இந்திய அணி பீல்டிங்கில் முன்னேற்றம் கண்டால் இன்னும் வலுவாக இருக்கும்” என்று ரவி சாஸ்திரி கூறினார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *