டர்பன்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோரது அதிரடி ஆட்டம் மற்றும் தன்வீர் சங்காவின் சிறப்பான பந்து வீச்சால் 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ் திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. புதிய கேப்டனான மிட்செல் மார்ஷ் 49 பந்து களில், 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய டிம் டேவிட் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் விளாசினார். மேத்யூ ஷார்ட் 20, டிராவிஸ் ஹெட் 6, ஜோஷ் இங்லிஸ் 1, மார்கஸ் ஸ்டாயினிஸ் 6, ஆரோன் ஹார்டி 23, சீன் அபோட் 3 ரன்கள் சேர்த்தனர்.
தென் ஆப்பிரிக்க அணி சார்பில் லிஸாட் வில்லியம்ஸ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 227 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது 15.3 ஓவர்களில் 115 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரீஸா ஹெண்ட் ரிக்ஸ் 43 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்தார்.
தெம்பா பவுமா 0, ராஸி வான் டர் டஸ்ஸன் 21, கேப்டன் எய்டன் மார்க்ரம் 7, டெவால்ட் பிரேவிஸ் 5, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 0, மார்கோ யான்சன் 20, ஜெரால்டு கோட்ஸி 1, லிஸாட் வில்லியம்ஸ் 1, தப்ரைஸ் ஷம்ஸி 0 ரன்களில் நடையை கட்டினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அறிமுக சுழற்பந்து வீச்சாளரான தன்வீர் சங்கா 4 ஓவர்களை வீசி 31 ரன்களை
விட்டுக்கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். மார்கஸ் ஸ்டாயினிஸ் 3, ஸ்பென்சர் ஜான்சன் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்.
ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வானார். 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. 2-வது ஆட்டம் இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
நன்றி
Publisher: www.hindutamil.in