கொலை மிரட்டல்: முன்னாள் பாக். கிரிக்கெட் வீரருக்கு 12 ஆண்டுகால சிறை தண்டனை?

கராச்சி: நெதர்லாந்து எம்பி கீர்ட் வில்டர்ஸ்-க்கு எதிராக கொலை மிரட்ட விடுத்து வீடியோ வெளியிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீப்க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 12 ஆண்டுகாலம் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

முகமது நபி குறித்த கார்டூன் போட்டியை நடத்துவதற்கான அறிவிப்பை நெதர்லாந்து எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் வெளியிட்டதை அடுத்து, அவரது இந்த அறிவிப்புக்கு இஸ்லாமியர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உலகின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பாகிஸ்தானிலும் மக்கள் கொந்தளித்தனர். இதனையடுத்து வில்டர்ஸுக்கு கடும் கொலை மிரட்டல்களும் அவர் தலைக்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து வில்டர்ஸ் அந்தக் கார்ட்டூன் போட்டியை ரத்து செய்தார். முகம்மது நபி குறித்து கார்டூன் போட்டியை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்ட கீர்ட் வில்டர்சை கொல்பவர்களுக்கு 21,000 யூரோக்களை ($23,000) வழங்குவதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீஃப் கடந்த 2018ம் ஆண்டு வீடியோ மூலம் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தொடர்பாக டச்சு அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தனர். காலித் லத்தீப், வில்டர்ஸைக் கொலை செய்ய மற்றவர்களைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கார்டூன் போட்டியை ரத்து செய்ய வைக்க வேண்டும் என்பதற்காகவும், கீர்ட் வில்ட்சின் இஸ்லாமிய விரோத நடவடிக்கைக்குப் பழிவாங்கவும்தான் இத்தகைய அறிவிப்பை காலித் லத்தீஃப் வெளியிட்டதாக நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்கறிஞர் கெய்ப்பர்ஸ் கோர்ட்டில் வாதாடும் போது, “காலித் லத்தீப்பின் நோக்கம் வன்முறையைக் கையிலெடுத்து ஒரு மனித உயிரை கொல்வது. மேலும், டச்சுப் பிரதிநிதியை மவுனமாக்குவது. கார்ட்டூன் போட்டியை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டதற்காக ஒருவரை கொலை செய்ய நினைப்பதும், அதற்காக பணம் தருகிறேன் என்று தூண்டுவதும் கடும் தண்டனைக்குரியது. எனவே லத்தீபுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும்” என்று வாதாடினார்.

இந்த வழக்காடலின் போது காலித் லத்தீப் நீதிமன்றத்துக்கு வரவில்லை. அவர் பாகிஸ்தானில் இருக்கிறார். இது தொடர்பாக ஊடகங்கள் பல ஹேகில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முயன்று, தோல்வி கண்டன. இது தொடர்பாக பாகிஸ்தானுடன் பேச முயன்றும் தோல்வியே ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் கெய்ப்பர்ஸ் கூறினார்.

“இந்த விவகாரத்தில் நெதர்லாந்து அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், பாகிஸ்தானுடன் சட்ட ரீதியான உடன்படிக்கை வைத்திருக்க வேண்டும், ஆனால் இல்லை. இதனால் லத்தீப் விடுத்த கொலை மிரட்டலுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை” என்று வழக்கறிஞர் கெய்ப்பர்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த வில்டர்ஸ், “தனக்கு தற்போதும் கொலை மிரட்டல்கள் வந்தவண்ணம் இருப்பதாகத் தெரிவித்தார். கார்ட்டூன் போட்டிக்காக தன் தலைக்கு விலை வைப்பது சரியா? தன்னை மவுனமாக்க முடியாது” என்றார். இவர் தனது இஸ்லாமிய விமர்சனக் கருத்துக்களினால் கடந்த 2004 முதல் 24 மணி நேர பாதுகாப்பில் இருந்து வருகிறார். கார்ட்டூன் போட்டி குறித்த அறிவிப்பு காரணமாக நெதர்லாந்து மக்கள் இதை எதிர்த்தனர். தேவையில்லாமல் ஒரு சமூகத்தினரை தூண்டி விடக்கூடாது என்று கண்டித்தனர்.

காலித் லத்தீப் வீடியோவில் வில்டர்ஸ் தலைக்கு வைத்த விலையைக் கேட்டு ஒரு நபர் வில்டர்ஸை கொலை செய்ய முயன்றார். பாகிஸ்தானைச் சேர்ந்த ஜுனைத் என்ற அந்த நபர், கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்தீப் வழக்கின் மீதான தீர்ப்பு செப்டம்பர் 11ம் தேதி வெளியாகவுள்ளது.

காலித் லத்தீப் பாகிஸ்தானுக்காக 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார். 2017-ம் ஆண்டு துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டித் தொடரில் சூதாட்டத்தில் சிக்கியதால் இவருக்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இவர் கடைசியாக 2016-ல் ஆடினார். கடந்த ஆண்டு இவரது தடை முடிவுக்கு வந்தது. தற்போது, கராச்சியில் கிளப் மட்டத்தில் பயிற்சி அளித்து வருகின்றார் லத்தீப்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *