புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இறுதிப் போட்டி நடந்தது. இதில் ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியை ஃபவுல் செய்தார். எனினும் 2-வது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
தொடர்ந்து அடுத்த 4 வாய்ப்புகளில் முறையே 86.32 மீட்டர், 84.64 மீட்டர், 87.73 மீட்டர், 83.98 மீட்டர் தூரம் ஈட்டியை செலுத்தினார். இதில்அதிகபட்ச செயல்திறன் மட்டுமே கணக்கிடப்படும். அந்த வகையில், 88.17 மீட்டர் செயல் திறனுடன் நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதிப் போட்டியில் மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்றனர். இதில் முதல் 3 சுற்றுகளுக்கு பின்னர் இந்திய வீரர்களான நீரஜ் சேப்ரா, கிஷோர் ஜனா, டி.பி.மானு, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், செக்குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச், ஜெர்மனியின் ஜூலியன் வெபர், பின்லாந்தின் ஆலிவர் ஹெலண்டர், லிதுவேனியாவின் எடிஸ் மடுசெவிசியஸ் ஆகிய 8 பேர் மட்டுமே நீடித்தனர். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் கடைசி வீரர்களில் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்தது இதுவே முதல்முறை.
பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், செக்குடியரசின் ஜக்குப் வட்லெஜ்ச் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்தியாவின் கிஷோர் ஜனா 84.77 மீட்டர் தூரம் எறிந்து 5-வது இடத்தையும், டி.பி.மானு 84.14 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடத்தையும் பிடித்தனர்.
2-வது வாய்ப்பில் முதலிடம் பிடித்த நீரஜ் சோப்ரா, அதன்பிறகு கடைசி வரை அந்த நிலையிலேயே நீடித்தார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 3-வது சுற்றில் இருந்து 2-வது இடத்தை தக்கவைத்திருந்தார். ஆனால், அதன்பிறகு தனது மற்றவாய்ப்புகளில் ஒருமுறைகூட நீரஜ்சோப்ராவை நெருங்க முடியவில்லை.
2016-ல் நடைபெற்ற தெற்காசிய போட்டியிலும் நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீமை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்போதிருந்து, இருவரும் ஒரு டஜன் நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். எனினும் அனைத்து போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா வெற்றியுடன் திரும்பி உள்ளார். இதற்கு உலகதடகள சாம்பியன்ஷிப்பும் விதிவிலக்காக அமையவில்லை.
உலக தடகள சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் ஆகியவற்றில் தங்கப் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இதற்கு முன்னர் துப்பாக்கி சுடுதல் வீரரான அபிநவ் பிந்த்ரா இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தார். அவர், தனது 23 வயதில் உலக சாம்பியன்ஷிப்பிலும், 25 வயதில் ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றிருந்தார்.
ஈட்டி எறிதல் போட்டி வரலாற்றில் செக் குடியரசின் ஜான் ஜெலெஸ்னி, நார்வேயின் ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென் ஆகியோருக்கு பிறகு, ஒரே நேரத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற 3-வது வீரர் என்றபெருமையை இந்திய நட்சத்திரமான நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
ஜான் ஜெலெஸ்னி 1992, 1996,2000-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும் 1993, 1995, 2001-ம் ஆண்டுகளில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கமும் வென்றிருந்தார். ஆண்ட்ரியாஸ் தோர்கில்ட்சென் 2008 ஒலிம்பிக்கிலும், 2009 உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் பெற்றிருந்தார்.
உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதன் மூலம் அனைத்து வகையிலான பட்டங்களையும் வென்று தனது ஈட்டி எறிதல் வாழ்க்கையை முழுமை பெறச் செய்துள்ளார் நீரஜ்சோப்ரா. 2018-ல் ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்றார். டைமண்ட் லீக் தொடரில் 2022 மற்றும்2023-ல் தலா 2 முறை பட்டம் வென்றார். கடந்த ஆண்டு டைமண்ட் லீக் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் வாகை சூடினார். 2016-ல் ஜூனியர் உலக சாம்பியன், 2017-ல் ஆசிய சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார்.
தலைவர்கள் வாழ்த்து: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு: நீரஜ் சோப்ராவின் சாதனையை பார்த்து இந்தியாவே பெருமைப்படுகிறது. அவருக்கு எனது இதயம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். புடாபெஸ்டில் அவரது சிறப்பான சாதனை, லட்சக்கணக்கான நமது நாட்டு இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும். இதே போட்டியில் 5, 6-வது இடம் பிடித்த இந்திய வீரர்கள் கிஷோர் ஜனா, டி.பி. மானு ஆகியோருக்கும் பாராட்டுகள்.
பிரதமர் மோடி: திறமையான நீரஜ் சோப்ரா சிறந்து விளங்குகிறார். அவரது அர்ப்பணிப்பு, துல்லியம்,ஆர்வம் ஆகியவை அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமின்றி, ஒட்டுமொத்த விளையாட்டுஉலகிலும் ஈடு இணையற்ற சிறந்த வீரருக்கான அடையாளமாக்குகிறது. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள்.
முதல்வர் ஸ்டாலின்: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியராக வரலாறு படைத்து, இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் ஈட்டிஎறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. அவருக்குநெஞ்சார்ந்த பாராட்டுகள். அவரதுஅர்ப்பணிப்பு உணர்வும், இமாலயசாதனைகளும் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் நிலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
