பெரிய போட்டிகளிலும் ஐசிசி தொடர்களிலும் சொதப்புவது இந்திய டாப்-ஆர்டர் வீரர்களே!- சாபா கரீம்

இந்திய அணியின் 4-ம் நிலை வீரர் யார் என்ற விவாதங்கள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, சொதப்புவது டாப் ஆர்டர் வீரர்கள்தான் அவர்களை முதலில் சரி செய்யுங்கள் என்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம்.

ஆசியக் கோப்பையிலும் சரி, உலகக் கோப்பையிலும் சரி டாப் ஆர்டர் நன்றாக ஆட வேண்டும் அப்போதுதான் இந்திய அணி உலகக்கோப்பையில் ஜொலிக்க முடியும் என்கிறார் சாபா கரீம். ஒருமுறை முகமது ஆமீர் இந்திய டாப் ஆர்டரை சடுதியில் வெளியேற்ற பாகிஸ்தான் வென்றது, அதே போல் ஷாஹின் அஃப்ரீடி ஒருமுறை டி20 உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோரைச் சாய்க்க இந்திய அணி தோல்வி கண்டது.

பிறகு மிட்செல் ஸ்டார்க், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இந்திய டாப் ஆர்டரைப் பாடாய்ப்படுத்தியுள்ளனர், அந்தப் போட்டிகளில் எல்லாம் இந்திய அணி தோல்வியையே தழுவியுள்ளது. இதைத்தான் சாபா கரீம் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜியோ சினிமாவுக்காக பேட்டியளித்த சாபா கரீம் கூறியதாவது:

டாப் ஆர்டர்தான் இந்திய அணியின் பெரிய பலம். ஆனால் நாம் எப்படி செயல்படப்போகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கின்றது. நான் இதுவரை பார்த்த வரையில் பெரிய போட்டிகள், முக்கியமான போட்டிகளில், அல்லது ஐசிசி தொடர்களில் இந்தியாவின் டாப் ஆர்டர்தான் சொதப்புகின்றனர்.

எனவே அதுதான் இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எனவே வரவிருக்கும் ஆசியக்கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் இந்தியா பரிணமிக்க வேண்டும் என்றால் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டும். ரெகுலராக இவர்கள் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டும் குறிப்பாக பெரிய போட்டிகளில் இவர்கள்தான் ஆட வேண்டும்.

ஆகவே ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம். இவர்களிடத்தில் ஏகப்பட்ட அனுபவம் உள்ளது. ஷுப்மன் கில்லை அனைத்து வடிவ வீரர் ஆக்கியுள்ளோம். அவர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க இதுதான் சிறந்த வாய்ப்பு எனவே அவரும் கிடைத்த வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

கில் மிக முக்கியமான வீரர். ஏனெனில் ரோஹித் சர்மா தொடக்கத்தில் மெதுவாகவே ஆடுவார், பிறகுதான் விளாசத்தொடங்குவார். அந்தத் தருணங்களில் சுப்மன் கில்தான் ரன் ரேட்டைத் தக்கவைக்க வேண்டும். சில வேளைகளில் ரோஹித் சர்மா தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறார். இது ரிஸ்கான விஷயம்.

ஆனால் ஆசியக் கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோஹித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆகவே ஷுப்மன் கில் மீது அதிக சுமை உள்ளது. அவர் ஆடும் விதம் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு முக்கியமான தொடர்களாகும் இது.

இவ்வாறு கூறுகிறார் சாபா கரீம். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் இந்திய அணி செப்;2ம் தேதி முதல் போட்டியில் ஆடுகிறது.

சாபா கரீம் சொல்வது மிக முக்கியமான ஒரு விஷயமாகும். ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட மிடில் ஆர்டர்களின் பலவீனங்களைப் பேசும் அதே வேளையில் டாப் ஆர்டர் சொதப்பல்களையும் பேசியாக வேண்டும். இந்த அளவில் சாபா கரீம் சுட்டிக்காட்டுவது முக்கியமான ஒன்று.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *